Thursday, April 07, 2011

Rest in Peace : நடிகை சுஜாதா :-(


(1952 - 2011)  :-(
  "மச்சானப் பாத்தீகளா?... "

இளையராஜாவின் முதல்கானத்தை அன்னக்கிளியாக அபிநயித்து ஒரு மாபெரும் இசைப்பயணத்தைத் துவங்கிவைத்த‌ நடிகை சுஜாதா காலமானார் என இன்று படித்தபோது கவலையாக இருந்தது... :-(

முன்பெல்லாம் ஒரு நடிகரோ அல்லது திரையுலகப் பிரபலமோ மறைந்தால் "ஒளியும் ஒலியு"மில் அந்தவாரம் முழுவ‌தும் அந்தப் பிரபலத்தின் பாடல்களை ஒளிபரப்புவார்கள்.. அந்த வார ஞாயிற்றுக்கிழமைத் திரைப்படம் உறுதியாக அந்த நடிகர்/நடிகை நடித்த பிரபலமான படமாகத்தான் இருக்கும்! இப்போதெல்லாம் டி.ஆர்.பி என்னும் மூன்றெழுத்து மந்திரத்தைத் தாண்டியும் இரண்டு நிமிடம் யாருக்கேனும் சேனல்கள் நேரம் ஒதுக்கவேண்டுமென்றால் அந்த சேனல் அவருடைய சொந்தச் சேனலாகத்தான் இருக்கவேண்டும்!

"இளையராஜாவின் முதல்பாடல் இது" என்று சின்ன வயதில் அந்த சூப்பர்ஹிட் பாடலை டிவியில் முதன்முறை பார்த்தபோது இது சுஜாதாவாக இருக்கவே முடியாது.... இருக்கவும் கூடாது... என்று ஆதங்கப்பட்டேன் டவுசர் நாட்களில்! காரணம் நான் அப்போதே "அவள் ஒரு தொடர்கதை" பார்த்திருந்தேன்! அப்போது பார்த்தபோது அந்தப் படம் எனக்குப் புரியவேயில்லை ....ஆனாலும் கமல்ஹாசன் குரல்களை மாற்றி மாற்றிப் பாடும் "கடவுள் அமைத்துவைத்த மேடை" பாடல் அந்தப் படத்தில்தான் வரும் என்று சொல்லிவைத்திருந்ததால் கஷ்டப்பட்டு பொறுமையாக அந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.....(ரொம்ப‌ச் சின்ன‌ வ‌ய‌து அப்போது) பல மெசேஜ்கள் சொன்ன அந்தப் படத்தின் முடிவில் நான் அந்த வயதில் புரிந்துகொண்ட ஒரே விஷயம் "சுஜாதா ஒரு மிகுதியான பேரறிவு படைத்த பெண்மணி" என்பது மட்டும்தான்!!!!

அதுமட்டுமில்ல...... "ஏன் எதற்கு எப்படி?", "கொலையுதிர் காலம்" , "என் இனிய இயந்த்ரா" போன்ற அற்புதமான அறிவியல் கதைகளையும், புத்தகங்களையும் எழுதியிருக்கும் மாமேதை எழுத்தாளர் அல்லவா அவர்!!! (புரியுதா???  எழுத்தாளர் "சுஜாதா" இவங்கதான் என்று மனதில் உருவேற்றி வைத்திருந்தேன் எழுத்துக்கூட்டித் தமிழ் வாசித்த வயதில்!!!)  அப்பேர்ப்பட்ட சுஜாதா எப்படி "மச்சானைப் பாத்தீகளா..." என்று இப்படி நாட்டுப்புறமாக ஆடி நடிக்கலாம்?? என்பதுதான் என்னுடைய ஆதங்கம்....!!!

நடிகைகளைப் பொறுத்தவரை.... அவர்களும் பெண்கள்தான் என்பதை மட்டும் நம் அத்தனைபேரும் ஏற்றுக்கொள்வோம் ஆனால் ஷ்ரேயா சரண் முத‌ல் ஷார‌ன் ஸ்டோன் வ‌ரை எந்த‌ ம‌ண்ணிலும் அவ‌ர்க‌ளுக்கான‌ அழுத்த‌ங்கள் மிக‌மிக‌ அதிக‌ம்... சுஜாதா ஓர் அற்புதமான ந‌டிகை....எக் கால‌த்திலும் ஒரு க்ளீண் அண்ட் டீச‌ண்ட் இமேஜுட‌னேயே க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்ட‌வர்.... அந்தக்‌கால‌த்தில் தமிழ் சினிமாவில் "அவ‌ள் ஒரு தொட‌ர்க‌தை"யிலும் "அவ‌ர்களி"லும், அந்தப் ப‌டங்களை இயக்கிய‌ பால‌ச‌ந்த‌ரைவிட, அந்த‌ப் ப‌ட‌ங்க‌ளில் ப‌ண‌ம்போட்ட‌ த‌யாரிப்பாள‌ர்க‌ளைவிட‌ அதில் ந‌டித்த‌ சுஜாதாவின் தைரிய‌மே மிகுதியான‌து.....! அழுத்த‌மான‌ பெண்மை இழையோடும் அந்தக் கம்பீரமான‌ குரலையே சரியான நேரங்களில் மென்மையும் பாச‌மும் க‌ல‌ந்த‌ மாடுலேஷனில் வெளிப்படுத்துவது சுஜாதாவின் ஸ்பெஷல் ஐடெண்டிட்டி!(சுஜாதாவிடம் மறந்துவிடவே முடியாதது அவருடைய குரல்!)

உல‌க‌த்தில் எங்குமே கிடைக்காத‌ ஹிப் ஸைஸில் ஒரு பேண்ட்டைத் தைத்து... வ‌யிற்றை அதில் அழுத்திப் புதைத்து.... பெல்ட்டைவைத்து இருக்கிக்கட்டிக்கொண்டு... "ம‌ம்மீ.. நான் காலேஜ் போயிட்டு வ‌ர்றேன்..." என்று போன‌ ஜென‌ரேஷ‌ன் ஹீரோக்க‌ள் ஒப்பேத்திக்கொண்டிருந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் அவ‌ர்க‌ளை ல‌வ்வும் காலேஜ் பெண்ணாக‌ ந‌டிக்கும் ஸ்கோப்தான் மிச்ச‌மிருந்தது  வ‌ய‌து மீறியதொரு புர‌ட்சிக‌ர‌மான பெண்ணாக நடித்து அறிமுக‌மான நேரத்தில் சுஜாதாவுக்கு! இவரது உயரம் வழங்கிய கம்பீரமான பெர்சனாலிடியும் ஒரு காரணம்!(நியாயப்படி இது ப்ளஸ் பாயிண்டாக இருந்திருக்கவேண்டும்! ஹ்ம்ம்ம்... தமிழ்சினிமாவின் த‌லையெழுத்து!)

அத‌ன்பின் சீனிய‌ர் ஹீரோக்க‌ளுட‌ன் இவ‌ர் ஜோடிபோட்டிருந்த‌தால் ர‌ஜினி-க‌ம‌ல் இவ‌ரோடு இணைந்து  ந‌டிக்க‌ சிர‌ம‌ப்ப‌ட்டார்க‌ள்!! (இப்போது ஷ்ரேயாவுக்கும் த்ரிஷாவுக்கும் இல்லாத‌ சிர‌ம‌ம் இது!) அந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் பொதுவாக‌ ஜெய்ச‌ங்க‌ர், விஜ‌ய‌குமார் போன்ற‌வ‌ர்க‌ளின் மூன்று வ‌ய‌து மக‌னை வில்ல‌ன் யாராவ‌து க‌ட‌த்திவைத்து ஃபோன் செய்து மிர‌ட்டினால்.... அந்த ஃபோன்காலை எடுத்துப் பேசிவிட்டு "என்ன‌ங்க‌..... ந‌ம்ம‌ப் பைய‌ன‌க் க‌ட‌த்தி வெச்சிருக்காங்க‌..க‌..க‌..க‌" என்று மிரட்சியுடன் க‌த‌றும் ஹீரோவின் அண்ணி அல்ல‌து அக்கா க‌ன்ஃபார்ம்டாக‌ சுஜாதாவாக‌த்தான் இருப்பார்..... ஆனால் அதே கால‌க‌ட்ட‌த்தில் "விதி" என்று ஒரு ப‌ட‌த்தில் பூர்ணிமா ஜெய‌ராமுக்காக‌ வாதாடும் அதிர‌டியான‌ ஒரு லாயர் ரோலில் ஒரு மாஸ் ஹீரோவுக்கு இணையாக  அத்தனை பவர்ஃபுல்லாக மிரட்டியிருப்பார் சுஜாதா!.... ர‌ஜினியைச் சின்ன‌ வ‌ய‌தில் தொலைத்துவிட்டு ம‌ன‌நிலை ச‌ரியில்லாம‌ல் போய்விடும் தாயும் எப்போதுமே சுஜாதாதான் நம் தமிழ்த்திரையில்!!! :-(

"வில்ல‌னி"ல் சின்ன‌ அஜித்திட‌ம் பாந்த‌மாக‌ப் பேசும் ஒரு காட்சி இருக்கும்.... அதில் அந்த‌க் க‌தாபாத்திர‌த்துக்கே ஏற்ற‌தான‌ க‌ணிவையும் பாச‌த்தையும் இய‌ல்பாக‌க் கொட்டி அர‌வ‌ணைக்கும் உட‌ல்மொழியில் ரொம்ப அழகாக‌ வெளிக்கொண்டு வ‌ந்திருப்பார்.... பொதுவாக‌வே ந‌டிக‌ர்க‌ள் ம‌ற்றும் அர‌சிய‌ல்வாதிக‌ள் த‌ங்க‌ள் உண்மையான‌ உண‌ர்வுக‌ளை வெளிக்காட்டினாலும் அதை உல‌க‌ம் ந‌ம்பாது!!! கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் அந்த‌க் க‌லையில் தேர்ந்த‌வ‌ர்களல்லவா.... ஆனாலும்கூட‌ சுஜாதாவின் அழ‌கிய‌ பெரிய‌ விழிகள் திரையில் க‌ல‌ங்கி ஒருபுற‌மாக‌ ஒதுங்கும்போதெல்லாம் ஏதோ ந‌ம்ம‌வீட்டுப் பெண் க‌ல‌ங்குவ‌தைப் போல‌ இருக்கும்.... அந்த‌க் க‌ணீர் குர‌ல் குழையும்போதும் ச‌ங்க‌ட‌த்தில் பார்வையாள‌னின் தொண்டையும் அடைக்கும்.... அது ந‌டிப்புதான்... முழுக்க‌ முழுக்க‌ நடிப்பாகவே கூட‌ இருந்திருக்க‌லாம்.... ஆனாலும் இன்னும் எத்த‌னை வ‌ருட‌ம் சுஜாதா பிம்பங்களாக‌ சின்ன‌த்திரையில் தோன்றினாலும் நினைவுக‌ளாக‌ ம‌ன‌த்திரையில் உல‌வினாலும் ஏதோவொரு இன‌ம்புரியாத‌ ஒரு பாச‌த்துட‌ன்தான் நினைவுகூற‌ப்ப‌டுவார் அத்த‌னை த‌லைமுறை ர‌சிக‌ர்க‌ளாலும்!

சுஜாதா அவ‌ர்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கை குறித்து எந்த‌க் குறிப்பையும் கேள்விப்ப‌ட்ட‌தில்லை அவ‌ர் ம‌ர‌ண‌ச்செய்தியைக் கூறும் வெப்சைட்டுக‌ளிலும் அவ‌ர‌து குடும்ப‌த்தைப் ப‌ற்றிய‌ குறிப்புக‌ளில்லை..... ஒரு ந‌ல்ல‌ ந‌டிகையாக‌ நிறைவான‌ ந‌டிப்பை வெளிப்ப‌டுத்திப் புக‌ழ்பெற்று இன்று உல‌கைவிட்டு ம‌றைந்திருக்கும் சுஜாதாவின் ஆன்மா அமைதியான காற்றில் தென்றலாய்க் கரையட்டும்..... Rest in peace ma'am!!

வ‌ருத்த‌த்துட‌ன்,

பிர‌பு எம்

8 comments:

  1. நல்ல நடிகை..நீங்கள் சொன்ன வில்லன் படக் காட்சி எனக்கும் பிடிக்கும். அந்த சின்ன பையன் பற்றி பண்றேன் மேடம் என்று சொல்லுவது இன்னும் அழகு.அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்....

    ReplyDelete
  2. அவங்களோட குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் . .
    May her soul rest in peace .

    ReplyDelete
  3. அதுமட்டுமில்ல...... "ஏன் எதற்கு எப்படி?", "கொலையுதிர் காலம்" , "என் இனிய இயந்த்ரா" போன்ற அற்புதமான அறிவியல் கதைகளையும், புத்தகங்களையும் எழுதியிருக்கும் மாமேதை எழுத்தாளர் அல்லவா அவர்!!! (புரியுதா??? எழுத்தாளர் "சுஜாதா" இவங்கதான் என்று மனதில் உருவேற்றி வைத்திருந்தேன் எழுத்துக்கூட்டித் தமிழ் வாசித்த வயதில்!!!) அப்பேர்ப்பட்ட சுஜாதா எப்படி "மச்சானைப் பாத்தீகளா..." என்று இப்படி நாட்டுப்புறமாக ஆடி நடிக்கலாம்?? என்பதுதான் என்னுடைய ஆதங்கம்....!!!


    .... Age of innocence.

    ReplyDelete
  4. Lovely post about her.... She will be missed.
    May her soul rest in peace.

    ReplyDelete
  5. சுஜாதா ஒரு சிறந்த நடிகை.
    மனப்பூர்வமான ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  6. சுஜாதா ஒரு அருமையான நடிகை.சிம்ரன் போல் உடல்வாகு கொண்டவர்.

    ReplyDelete
  7. ம்ம்...சுஜாதா மரணத்துக்கு இந்த பதிவு சரியான அஞ்சலி...

    ஆனால் எழுத்தாளர் சுஜாதா வை நடிகை சுஜாதானு நினைச்சது..ம்ம்..சாரி சுஜாத்தாம்மா..உங்க இழப்பையும் மீறி கொஞ்சம் சிரிச்சுட்டேன்...:((

    ம்ம்...சுஜாதா கிட்டே ஒரு தோரணை மிடுக்கு இருக்கும் பிரபு...அது பழம்பெரும் நடிகை பானுமதிக்கு அப்புறம் னு சொல்லலாம்...எனக்கு சுஜாதா நடிச்ச படத்தில் ரொம்ப பிடிச்ச படங்களில் உன்னை நான் சந்தித்தேன் படத்தினை கூட குறிப்பிட விரும்புறேன்...என்னவோ அழகான,சோகமான..தைரியமான..கனிவான..எல்லா முகமும் சுஜாதா க்கு ரொம்பவே பாந்தம்...

    விதி க்கு அப்புறம் பெரிய ஸ்கோப் அவருக்கு கொடுக்க படலன்னு தான் சொல்லலாம்...என்னைக்கு நம்ம தமிழ் உலகம் திறமையானவங்களை நல்லா யூஸ் பண்ணிருக்கு....

    எனக்கும் சுஜாதா பற்றிய details சரிவர தெரியலை...அவங்க இலங்கையில் பிறந்தவங்க மற்றும் தாய் மொழி மலையாளம்னு மட்டும் கேள்வி பட்டு இருக்கேன்...பட் மணவாழ்க்கை சுகபடலன்னும்...கிட்னி கோளாறாகி இறந்துட்டாங்கன்னும் படிச்சேன்..இது எவ்வளவு உண்மை னு தெரியலை..ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை தவிர்த்து....தன் உடல் மொழியாலே...அற்புத பரிமாணங்களில் வித வித உணர்ச்சிகளை நடித்து காமிச்ச திறமைகாரியே...உமக்கு அஞ்சலி...உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!!!

    ReplyDelete
  8. சுஜாதாவை திருமணம் செய்து கொண்டவர் தொழிலே செய்யாமல் தொழிலதிபர் என்று பெயரில் இருந்தவர்.ஒரு மகன் உண்டு என்றும் எப்போதோ படித்த ஞாபகம்.

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)