எழுதும் ஆர்வம்தான் என்னை இந்த வலைப்பூ தொடுக்க வைத்தது. உங்கள் வாசிப்பினாலும், விமர்சனங்களாலும், நட்பினாலும் மெருகேறக் காத்திருக்கும் என் எழுத்துகள்..
Tuesday, December 14, 2010
பாட்டி கதை (பாகம் 1)
பாட்டி கதை (பாகம் 1)
1
அழகான அதிகாலை....அருகில் உள்ள கிராமத்தில் சேவல் ஒன்று கூவுகிறது.... ஒரு சின்ன பீப்பாய் நீர் பாய்ந்து வந்து மண்ணை நனைக்க .....மழைபெய்தால் கிளம்பும் மண்வாசனை பரவுகிறது... சாணத்தோடு கரைத்த நீரால் அந்த மண்ணை மெழுகுகிறார் வாசல்தெளிக்கும் அந்தப் பாட்டியம்மா!!!
தோல்சுருங்கி மென்மையான நரம்புகள் கையெங்கிலும் வெளியே தெரிகின்றன... தசைகளெல்லாம் முறுக்கின்றித் தொங்கிப் போயிருந்தாலும் வாளிக்குள் இருக்கும் நீரை வலுவாக அடித்துத் தெளிக்கின்றன அந்தக் கைகள்.... சில நொடிகளில் புழுதிமண்ணின்றி பக்காவாக செட்டாகியிருக்கிறது வீட்டுவாசல்.... வேண்டியோர் பலரின் காலடி படுவதற்காகப் பல வருடங்களாக ஏங்கிக் காத்திருக்கும் அந்த வீட்டு வாசல்!!
சில மணித்துளிகள்தான்...... பாட்டி இப்போது சமையலறையில்... அடுப்புப் பற்றவைத்ததுதான் தாமதம் அந்த அனுபவக் கைகளின் சமையல் ஜாலத்தில் இதோ சட்டியில் குபு குபு வென குமிழ்கள் வெடிக்கின்றன கொதிக்கும் புதுக் குழம்பில்!!! சரியாக எண்ணெய் சட்டியில் கடுகுகள் பட்டாசு வெடிக்கும் நேரத்தில்.... வாசலில் ஒரு மழலைப் புல்லாங்குழல்!!
"பாட்டிம்ம்மா...."
அழைக்கிறாள் ஸ்கூல்யுனிபார்ம் போட்ட அந்தப் பக்கத்துவீட்டுக் குட்டிதேவதை கையில் ஒரு காலி டிஃபன்பாக்ஸுடன்!!
"ஏய்ய்ய்... பூட்ஸு காலோட உள்ள வராதேனு பாட்டி எத்தனை தடவ சொல்லியிருக்கேன்...."
செல்லமாக அதட்டிக்கொண்டே, வேகமாகப் பாட்டி நடந்து வந்தாலும் நடையில் தளர்ச்சி தெரியத்தான் செய்கிறது!!! அந்தக் குழந்தை நாக்கை நீட்டி வழக்கம்போல் சிரித்துக்கொண்டே உடலை ஒருவிதமாகக் கோணிக்கொண்டு நிற்கிறாள் பூட்ஸைக் கழற்றிவிட்டால் மீண்டும் மாட்டிக்கொள்ளத் தெரியாதவளாய்....
"அப்பா இன்னிக்கு இக்கிலி செஞ்சாங்க...!!"
பேச்சை மாற்றிவிட்டாள்!!... ;-)
டிஃபன் பாக்ஸில் மணக்க மணக்க பாட்டி வைத்த சாம்பார் ஊற்றப் படுகிறது!!! பாட்டியின் மெல்லினக் கைகள் அவள் தலையைப் பின்னிவிட.... டாட்டா காட்டிவிட்டு ஓடுகிறாள் குழந்தை..... அவள் அம்மாவுக்கு அரபுநாடு ஒன்றில் நர்ஸ் வேலை!! சொந்தப் பாட்டியில்லை பேத்திக்கு ஜடை பின்னிவிட!!!
தன்னந்தனியாக இந்த எழுபத்தியெட்டு வயதில் அந்தச் சிறய குடில்போன்ற வீட்டுக்குள் இங்கும் அங்கும் உற்சாகப் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருக்கும் இளமைப் பாட்டியம்மாவைக் கம்பீரமாகப் பார்த்து எப்போதுமே சிரித்துக் கொண்டிருந்தார், ரொம்பவே இளமையாக, முன் அறைச் சுவற்றின் மாலைபோட்ட ஃபோட்டோ ஃப்ரேமுக்குள் தாத்தா!!! அந்த ஊரிலேயே முதன்முதலில் கார் வாங்கியவர், தன் பெருமிதச் சின்னமான அந்த வெள்ளைநிற அம்பாசிடர் காரின் பக்கத்தில் நின்று முறுக்குமீசைப் புன்னகையோடு எடுத்த படம் அது!!!
2
சிலமைல்கள் தொலைவில் சேவலுக்குப் பதிலாக ஸ்கூல்பஸ்களின் ஹாரன்கள் கொக்கரிக்கும் நகரத்து அதிகாலை.... நூறுவயது லட்சியத்துடன் வேகமாய் நடைப்பயிற்சி செய்யும் குல்லாபோட்ட தாத்தாக்களுக்கு இடையே கொஞ்சம் இளமையாய் உணர்கிறார் நிமிர்ந்து நடக்கும் ராஜகோபாலன்....
ட்ராக் சூட், கேன்வாஸ் புதிது... வாக்கிங் ரூல்ஸ் கற்றுக் கொள்ள இன்னும் கொஞ்சகாலம் பிடிக்கும்......
"நேரமாகிவிட்டதோ... ???"
வழக்கமான பழக்கத்தில் மனம் அலாரம் அடிக்க....
"அட!! நேரமானால்தான் என்ன!!!"
அசட்டுத் தனமாகத் தெரிந்தது மனதின் இத்தனை வருடத்து வழக்கமான காலை நேர ஆஃபிஸ் பதற்றம்... !!
இன்னும் முழுதாகப் பழகவில்லை மனது இந்தப் புது ரிட்டையர்மென்ட் வாழ்க்கைக்கு!!!.....
சீரான நடை வீடு நோக்கி..... இன்னும் சிறிது நேரத்தில் வெயிலும் தூசியும் பரபரப்புமாக இந்த அழகை ஊர் இழந்துவிடும்.... அந்தப் பரபரப்பில் அவருக்கு வேலையேதுமில்லை.. குளிரூட்டப்பட்ட தன் சொந்த அறையில் நேற்று வாங்கிய, சின்ன வயதில் ரசித்துப் பார்த்த, ஹிட்ச்காக்கின் பழைய பட டி.வி.டி ஒன்று பார்ப்பதற்குத் தயாராக உள்ளது!!
ஒரு வருடமாகியும் கூட இப்போது வசிக்கும் வீடு இன்னும் புதிதாகத் தெரிகிறது.... நகரத்தின் மிகக் காஸ்ட்லியான அபார்ட்மெண்டில் ஒரே மகன் ஜீவா வாங்கிய வீடு...! திரு.ராஜகோபாலன்.... அலுவலகத்தில் கறாரான அதிகாரி.... வீட்டில் கண்டிப்பான அப்பா... திட்டமிடுதலும் அதைச் சிறிதும் பிசகாமல் செயல்படுத்தி முடித்தலும்தான் அவர் வாழ்க்கைக் கதையின் ஒன்லைன்.... சொல்லப்போனால் ஒரே லைன்!
தன் ஒரே மகன் ஜீவா பிறந்தபோதே அவனது முதல் இருபது ஆண்டுகளை அவர் திட்டமிட்டுவிட்டார்... இடையே பள்ளிக்காலத்தில் அவனுக்கு வந்த மஞ்சள் காமாலையைத் தவிர மற்ற அனைத்துமே அந்தத் திட்டத்தின்படிதான் நடந்தது!
ஜீவா...... எம்.பி.ஏ...சாக்லெட்டுகள், பிஸ்கெட்கள் மற்றும் ஹெல்த்டிரிங்க்ஸ் தயாரிக்கும் பெரியதொரு பன்னாட்டு நிறுவனத்தின் ரீஜினல் ஹெட்!! அலுவலக மற்றும் சொந்தத் தேவைகளுக்கென விலையுயர்ந்த கார் ஒன்றை அவனுக்கென ஓட்டுநருடன் வழங்கியிருந்தது ஜீவா பணிபுரியும் நிறுவனம்....
இனிமேல் தன் மகனின் முடிவுகளின்படிதான் வாழ்க்கை என்று மனதிற்குள் முடிவெடுத்திருந்த ராஜகோபாலன் வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தார்..... ரொம்பவே சந்தோஷமாக....காரணம் இன்னும் ஒரு மாதத்தில் ஜீவாவுக்குத் திருமணம்!! அப்பாதான் பெண்பார்த்து முடிவுசெய்திருந்தார் அஞ்சலியை..... ஜீவாவின் பரிபூரண சம்மதத்துடன்!!
3
இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஜீவா அஞ்சலியிடம் முதன்முறையாக போனில் பேசினான்.....!!
"பேசிட்டியா??.."
வழக்கமான போலீஸ் தோரணையில் போனில் அதட்டினார் ராஜகோபாலன்.
"அப்பா...ஆஃபீஸ்ல இருக்கேன்.... அப்புறம் பேசுறேனே... ஏன் இப்படி ஆளாளுக்கு மிரட்டுறீங்க??!!!"
"இப்படித்தான் நேத்தும் சொன்ன... ...எட்டுமணிக்குப் போயிட்டு அஞ்சு மணிக்கு வரவனுக்குதான் ஆஃபீஸ் எல்லாம்... மணி ஏழரையாச்சு... அந்தப் பொண்ணுக்கு ஃபைனல் செமஸ்டர் நடக்குதாம்... படிக்காம உனக்காகக் காத்துக்கிட்டிருப்பா...... உடனே கால் பண்ணு... Dont make me call again... "
..
....
......
........
சில நிமிடங்களில் சற்று தூரத்தில் செல்போனில் மணியடிக்கிறது....
"ஹலோ..... ஹலோ.... நான் அஞ்சலி பேசுறேன்....ஹலோ....."
"ஹம்..ஹலோ..... ஹாய் அஞ்சலி.... நான் ஜீவா... சொல்லியிருப்பாங்கனு நினைக்கிறேன்.. நான் பேசுவேன்னு..."
(மிக மெல்லிய புன்னகை உதட்டைக் கீறிக் குரலோடு கலந்தொலிக்கிறது...)"ஓ! ஹலோ...ஹ்ம்ம்ம்ம்...சொன்னாங்க... ஆனா நேத்தே பேசுவீங்கனு சொன்னாங்களே....!!"
" ம்ம்...ஆமா... நானும் கால் பண்ணேனே...!!!"
"இல்லையே..!!!"
"நேத்து இதே டைம்ல ரெண்டு ரிங் மட்டும் வந்து ஒரு கால் கட் ஆகியிருக்குமே!!"
இருமுனையிலும் கொஞ்சமே கொஞ்சம் சிரிப்பு....
.................
........................
மீண்டும் ஜீவாவின் அப்பா அழைக்க... என்கேஜ்ட் டோன் கேட்டது...சிரித்துக்கொண்டே தொலைபேசியை அணைத்தார்!!!
இஷ்டப்பட்டு உழைப்பதால் கஷ்டம் தெரியாமல் முன்னேறியவன் ஜீவா..... தினம்தினம் ஜீவா லேப்டாப்பை மூடுவதற்குள் அந்த அலுவலகத்தின் தொலைதூர ஊழியர்கூட டிராஃபிக் மற்றும் சிக்னல்களைக் கடந்து வீடுபோய் சேர்ந்துவிடுவார்!...... இப்போதெல்லாம் தினமும் வேலைமுடியும் நேரம் உதட்டோரம் கொஞ்சம் இனிக்கிறது...... அஞ்சலியுடன் பேசுவது பிடித்திருக்கிறது ஜீவாவுக்கு!! ஓர் இனிமையான அனுபவமாய் அறியாமலேயே அறிந்துகொண்டார்கள் ஒருவரையொருவர் அழகாக!
"இந்தியாவுக்கு விளையாடுற எல்லாரையும்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்... கிரிக்கெட் ஒரு டீம் வொர்க் இல்லையா!!!"
"எல்லாருமேதான் நல்லா நடிக்கிறாங்க.... ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருத்தரைப் பிடிக்கும்... பிடிச்சவங்கன்னா யாரைச் சொல்லுறது!!"
இதுதான் அஞ்சலி!!!
இருப்பினும் ஜீவா அறிந்திருந்தான் சச்சினும், கமலஹாசனும் அவளுக்குக் கொஞ்சம் ஸ்பெஷல் என்று!...... அஞ்சலியின் விருப்பங்களை அறிந்துகொள்ளும் சுவாரஸ்யமான சவால் எந்தவொரு கம்ப்யூட்டர் கேமும் கொடுத்திராத இன்பத்தைக் கொடுத்தது ஜீவாவுக்கு!
மணிரத்னம்....ஏ ஆர் ரகுமான்... ரசகுல்லா...... தயிர்சாதம்..... மாதுளம்பழம்.......ஸ்பைடர்மேன்..... கொடைக்கானல்......எஸ்.பி.பி....இன்னும் இன்னும்....இன்னும்... எல்லாரையும் ம்ற்றும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு ரசிக்கும் அஞ்சலிக்கே தெரியாது இவையெல்லாம் அவளுக்கு ஸ்பெஷல்கள் என்று... ஆனால் ஜீவா ஒவ்வொன்றாகத் தெரிந்துகொண்டிருந்தான் பின்னாட்களில் அவள் ஆசைகளை அவளிடம் கேட்டு நிறைவேற்றும் அவசியமே இல்லாமல்! அஞ்சலியே தனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடிக்குமென்று ஒத்துக்கொண்டது இரண்டே விஷயங்களைத்தான் ஒன்று பச்சை நிறம் இன்னொன்று அவளுடைய பிரியமான பாட்டி!!!
அஞ்சலியின் தந்தைக்கு உயிரளித்த அவள் பாட்டியால் அவள் கல்லூரி சேர்ந்த வயதுவரைதான் உடன்வரமுடிந்தது... அந்த இதயம் இறுதியாகத் துடித்தது அஞ்சலியின் அரவணைப்பில்தான்...
"உனக்கு ஒன்னும் ஆகாது பாட்டி... நீ என்கூடத்தான் இருக்கப்போற.."
என்று தன் பாட்டியை அணைத்துக்கொண்டு அஞ்சலி சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த இதயத்தின் துடிப்பு தானாக அடங்கிப்போனதை அந்த அணைப்பிலேயே நேரடியாக உணர்ந்தாள் அஞ்சலி...... அவள் குழந்தையாக இருந்தபோது வலது கையில் சோறுபிடிக்கவும், இருகால் ஊன்றித் தரையில் நடக்கவும் கற்றுக் கொடுத்து, பின்பு தானே ஒரு குழந்தையாகிப்போய் டிவி ரிமோட்டில் சேனல் மாற்றவும், மைக்ரோவேவில் சோறு சமைக்கவும் தன் பேத்தியிடம் கற்றுக்கொண்ட செல்லப் பாட்டி!!! பாட்டியின் நினைவுகள் பசுமையாகவே தொடர்ந்தன அஞ்சலியின் பயணத்தில்.... அஞ்சலியின் 'பாட்டிகதைகள்' பொதுவாகப் பாட்டியில்லாதவர்களை ஏங்கவைக்கும் ஆனால் அவை ஜீவாவை வேறுவிதமாகப் பாதித்தன!!!
4
கிராமத்துவீட்டில் அதே பக்கத்துவீட்டுக் குட்டிப்பாப்பாவுக்கு இரவு உணவு ஊட்டிக்கொண்டிருந்தார் பாட்டியம்மா......
திடீரெனப் பாட்டிக்குத் தொண்டையில் ஏதோ உதறல்... பேச முடியவில்லை.... ஒருவிதமாகத் தொடர்ந்து புறையேறிக் கொண்டேயிருந்தது... கதை சொல்லக் கஷ்டப்பட்டப் பாட்டிக்குத் தண்ணீர் குடித்தும் அடங்கவில்லை... மீண்டும் மீண்டும் விம்மியிழுத்துக் கொண்டேயிருந்தது நெஞ்சு... பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் அழைத்து ஊரைக் கூட்டிவிட்டாள் குட்டிப்பாப்பா.....ஆளுக்கொரு வைத்தியம் சொல்லியும் விக்கல் அடங்கவேயில்லை...... இரவு ரொம்ப நேரம்வரைக்கும் தொடர்ந்தது தொண்டைக் குமுறல்!!
பின்னே... இத்தனை நாள் இல்லாமல் கிட்டத்தட்ட மறந்தேபோய்விட்ட பேரன் தன் பாட்டியைத் திடீரென்று நினைத்து நினைத்து அங்கே தூக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கும்போது தொண்டை விக்காதா பாட்டிக்கு!!
அஞ்சலியின் பேச்சைக் கேட்டதிலிருந்தே தன் சொந்தப் பாட்டியின் நினைவுகள் தொடர்ந்து வட்டமிட்டு வலிகொடுத்தது ஜீவாவுக்கு...
"என்ன பாவம் செய்தாள் என் செல்லப் பாட்டி.... இந்த வயதிலும் இப்படி தனிமைத் தண்டனையில் துவழ??"
மனம் கேட்கும் கேள்விகளுக்கு விடையற்றுத் தவித்தான் ஜீவா..... பாட்டிக்கு அங்கே தொண்டை விக்குவது தெரியாமல்........
பேரன்தான் நினைக்கிறான் என்று தெரிந்திருந்தாலாவது சந்தோஷமாகவே விக்கித் தீர்த்திருப்பாள் பாட்டி இங்கு இவன் தூங்கும்வரை!
(தொடரும்......)
அடுத்த பாகம் இங்கே!
Subscribe to:
Post Comments (Atom)
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
HUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது
சுடு சோறு தந்தவிட்ட இந்தப் பழம் சோறு வாங்கிக்கிறேன்.. இதில் தான் சுவை அதிகம்...
ReplyDeleteநன்றி நண்பா :)
ReplyDeleteபிரிய சகோ...இந்த முதல் பாகம் இப்ப ஜஸ்ட் படிச்சு முடிச்சேன்...இவ்வளவு பெருசெனு நினைச்சுட்டே தான் படிக்க ஸ்டார்ட் பண்ணினேன்..ஆனால் படிச்சு முடிச்ச பிறகு...நான் நினைச்சது எல்லாமே உல்டா..எவ்வளவு அழகு...ஒவ்வொருத்தரின் கதாபாத்திர அறிமுகம் செமையா இருக்கு...நிஜமாய் அழகான படம் பார்க்கும் நினைப்பு எனக்கு வந்தது...அடுத்த பதிவுகளையும் படிச்சுட்டு இன்னும் சொல்றேன்...
ReplyDeleteபாட்டியின் அழகான அறிமுகம்...அப்படியே லிங்க் கொடுத்து தொடர்ச்சியான மற்ற கதாபாத்திரங்களின் அறிமுகம்..நல்லா ஸ்க்ரிப்ட் சகோ..நிஜமாய் டாகுமெண்டரி அப்டியே எடுக்கலாம் இந்த பக்கா ஸ்கிரிப்ட் பார்த்துட்டு..copy ரைட் போட்டு வைங்க...
ReplyDeleteஜீவா அஞ்சலியை பத்தி தெரிஞ்சுக்க முயற்சி பண்ணும் ரசனைகள் ரொம்ப பிடிச்சு இருந்தது...சகோ .க்ளாஸ்...தனி தனி கதாபாத்திரங்களும் எனக்கு சுவாரஸ்யமா இருந்தது...ஜீவா அப்பா கேரக்ட்டர் கூட புன்முறுவல் பூக்க வச்சது..(நாடோடிகள் படத்தில் விஜய் அப்பா கேரேக்ட்டர் மாதிரி..)
ReplyDeleteமுதல் பார்ட்டு க்கு என் பிரிய சகோ க்கு என் இனிய நம்ம ஊரு மல்லிகை பூ...புடிச்சுக்கோங்க....:)))
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி சகோ.. :)
ReplyDeleteநீளம் ஒரு தவிர்க்க முடியாத குறைதான் இந்தக் கதையில்..
இருந்தாலும் பொறுமையா வாசிச்சு கமெண்ட் தந்த அன்பு சகோவுக்கு ஆயிரம் நன்றிகள்!!
ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் சகோ :)
வணக்கம் பிரபு.. உங்கள் உலகிற்கு என்னை நானே வரவேத்துக்கிறன்..தோழி ஆனந்தி சொன்ன காரணத்தாலே முதலில் இப்பதிவுக்கு ஓடி வந்தேன்.. இதுக்கு ஏத்தோ பெயர் சொல்லுவாங்க.. முக்கோனத்தில் ஆரம்பிக்கும் கதை ஒரு கோணத்தில் முடிவது.. தனியாக தவிக்கும் பாட்டி, சராசரி வாழ்க்கை அப்பா மகன், பைனல் இயர் அஞ்சலி.. வெவ்வேறு கோணத்தில் ஆரம்பிப்பது பாசம் என்னும் கோணத்தில் இணைகிறது.. ம்ம்.. பைனல் இயர் பொண்ணுக்கு அது கட்டியும் என்ன கல்யாணம்.? வேலை வேலைனு இருக்குற பையன், வெட்கப்பட்டு முதல் நாள்ல மிஸ்டு கால் கொடுத்தவன் அடுத்த நாளே அந்த பொண்ணுகிட்ட இப்படி மானாவாரியா பேசுவானா.? ஆனா உண்மையிலே கண்ணின் முன் நடந்து வந்த பாட்டியும் மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் எழுத்துகளின் உச்சத்தை தெறிக்கிறது.. எனக்கு ஆனந்தி மேல் கோபம்.. அந்த அப்பாவுக்கு நான் வேறொரு முகத்தை உருவகபடுத்தியிருந்தேன்.. ஆனால் அவர் நாடோடிகள் விஜய் அப்பா சொன்னதும் நான் உருவாக்கிய கேரக்டர் காணாமல் போய்விட்டது.. பரவால.. அடுத்தத படிச்சுபுட்டு அங்க சொல்லிபுடுறன்.. வரட்டா...
ReplyDelete