Wednesday, December 15, 2010

பாட்டி கதை (பாகம் 2)

பாகம்-1 இங்கே  
                                                     
                                                   பாட்டி க‌தை (பாக‌ம் 2)

                                                                            5

ஒன்ப‌தாம் வ‌குப்புப் ப‌டித்த‌போது வ‌ந்த‌ கொடுமையான‌ ம‌ஞ்ச‌ட் காமாலையால் க‌டும் அவ‌தியுற்ற‌ ஜீவாவை நாட்டுவைத்திய‌த்துக்காக‌ கிராம‌த்துக்கு அழைத்துச்சென்று காப்பாற்றிய‌து அவன் பாட்டிதான்...

உட‌ல் நோவு வாட்டியெடுத்த‌போது ம‌டியில்போட்டுத் த‌லைவ‌ருடிக்கொடுத்த‌ பாட்டியின் பாச‌ம்.... இப்போது ஜீவாவின் த‌லைய‌ணையை ந‌னைக்கிற‌து க‌ண்ணீர்த்துளியாய்... குண‌மாகிப் ப‌த்து நாள் பாட்டியின் ஊட்ட‌த்தால் தேறியதும்... அந்த‌ப் ப‌த்து நாளும் பூர்வீக‌ நில‌புல‌ன்க‌ளில் சின்ன‌ மைன‌ராக‌ வ‌ல‌ம் வ‌ந்ததும்... குள‌த்தில் நேர‌ம்தெரியாம‌ல் குளித்துக் கிட‌ந்த‌வ‌னுக்காக‌க் க‌ரையிலேயே காத்துக் கிட‌ந்துப் பாட்டித் தலை துவ‌ட்டிவிட்டதும்...பாட்டியின் கைப்பக்குவத்தில் தேன்குழ‌ல் முருக்கு, அதிர‌ச‌ம், கேச‌ரி,ரொம்ப‌ப் பிடித்த‌ பால்ப‌னியாரம் ருசித்தது...!!! ப‌த்துநாளும் ப‌ல‌வித‌மாய்க‌ க‌ழிந்தன‌....

"பாட்டிய‌ விட்டுட்டு ம‌றுப‌டி போக‌ப்போறியா??"

"இதோ இப்ப‌வே ஜ‌ன‌வ‌ரி முடிஞ்சிருச்சு... பிப்ர‌வ‌ரி, மார்ச்..அவ்ளோதான்... ஏப்ர‌ல் மாச‌ம் லீவு.. நான் திரும்ப‌ வ‌ந்திடுவேன்!!!"

க‌ன்ன‌மிர‌ண்டிலும் முத்த‌ம் கொடுத்து நெற்றியில் முத்த‌ம் வாங்கித் தெரு முடியும்வ‌ரை திரும்பிப்பார்த்து கை காட்டிக்கொண்டே சென்றான்.... த‌ன் அம்மாவிட‌ம் அதிக‌ம் பேசிக்கொள்ளாத‌ ராஜ‌கோபால‌ன் சிரித்துக்கொண்டே எதுவும் பேசாம‌ல் ம‌க‌னை அழைத்துக்கொண்டு போனார்....

ஏப்ர‌ல் வ‌ந்தது.... ப‌த்தாம் வ‌குப்புப் பாட‌ங்க‌ளை லீவிலேயே துவ‌க்க‌ ஏற்பாடுக‌ளை செய்திருந்தார் அப்பா!! பாட்டியை ம‌ற‌ந்து ப‌டிப்பில் தீவிர‌மானான் ஜீவா...முடிவில் ம‌திப்பெண்க‌ளோடு மெட‌ல்களும் குவிந்த‌ன‌...

"ப‌ப்ளிக் எக்ஸாம் டென்ஷ‌ன் எல்லாம் முடிஞ்சிபோச்சு பாட்டி.... அடுத்த‌ ரெண்டு மாச‌ம் நான் உங்க‌ கூட‌வேதான் இருப்பேன்!!!" ....  அன்புள்ள‌ பாட்டிக்கு என்று ஓர் இன்லேண்ட் லெட்ட‌ரில் சேதி போன‌து...

ஆனால் அந்த‌ இர‌ண்டுமாதங்களுக்கும் "ஸ்விம்மிங், க‌ராத்தே, ப்ரென்ச் க்ளாஸ், கிள‌ப் கிரிக்கெட்.. என்று குறுகிய‌ கால‌ க‌டமைக‌ளை அடுக்கிவைத்திருந்தார் ராஜ‌கோபால‌ன்... சார்ல‌ஸ் டிக்கின்ஸ், அக‌தா கிறிஸ்டி ப‌டிக்க‌ணும்... உல‌க‌ விஷ‌ய‌ங்க‌ளைக் க‌த்துக்கிற‌ வ‌ய‌தில் அந்த‌க் கிராம‌த்துக்குப் போவதாவது... விடாது சிவ‌ப்புக்கொடி ப‌ற‌க்க‌விட்டார்!!

ப்ள‌ஸ் ஒன் முடிந்து ப்ள‌ஸ் டூ கூட‌ முடிந்துபோன‌து.... "பாட்டீ நான் ப்ள‌ஸ் டூ பாஸாகிட்டேன்.." என்று "ப‌தினாறு வ‌ய‌தினிலே" ஸ்டைலில் ஆண்"ம‌யிலா"க‌ வ‌ய‌ல்வ‌ர‌ப்பில் அகவுகிற‌ ஜீவாவின் கனவுக்கு எம‌னாக‌ வ‌ந்த‌து எண்ட்ரென்ஸ் எக்ஸாம்.....சரி காலேஜ் போன‌ப்புறமாவது... ஸாரி நோ சான்ஸ்.. அவ‌ன் ப‌டித்த‌து அல‌காபாத்தில் உள்ள‌ ஆர்.ஈ.சி யில்!! பெங்க‌ளூரில் சாஃட்வேரில் இரண்டுவ‌ருட‌ம் வேலை...அத‌ன்பின் மீண்டும் எம்.பி.ஏ... அதுவும் மும்பையில்....

இரண்டொருமுறை கட்டாயப்படுத்திப் பாட்டியை நகரத்திலிருக்கும் தன்வீட்டுக்கு அழைத்துவந்து தங்கவைத்தார் ராஜகோபாலன்... ஒரே வாரத்தில் அவர் வேலைக்குப் போயிருந்த நேரத்தில் ஏனோதெரியவில்லை பாட்டி சொல்லிக்கொள்ளாமல் பழையபடி கிராமத்துக்கு சென்றுவிட்டார்...!!

பாட்டிக்கு ஞான‌ப்ப‌ழ‌ம் வேண்டுமென்றால் தாத்தாவை ஒருமுறை சுற்றி வ‌ந்து வாங்கிக் கொண்டுவிடலாம்!!! அந்த‌க் கால‌த்திலேயே கார் வைத்திருந்த‌வ‌ர் ஜீவாவின் தாத்தா!!  வீடு, வ‌ய‌ல் ம‌ற்றும் தோப்பெல்லாம் வைத்திருந்தும் அந்த‌க் கால‌த்தில் கார் வைத்திருந்த‌துதான் இந்த‌க்காலத்திலும் அவரது பெருமித‌ அடையாள‌மாக‌ இருந்துவ‌ருகிற‌து... குறிப்பாக‌ப் பாட்டியின் ம‌ன‌தில்!!..... த‌ன்னைவிட‌ப் ப‌ல‌வ‌ய‌து மூத்த‌வ‌ரான‌ த‌ன் க‌ண‌வ‌ருக்கு இறுதிவ‌ரை ஒரு குழ‌ந்தையாக‌த்தானிருந்தார் பாட்டிய‌ம்மா!! சொந்த‌ நில‌த்தைக் குல‌தெய்வ‌க் கோயிலுக்குக் கொடுத்துவிட்ட‌ திருப்தியுட‌ன் திடீரென்று தாத்தா மாண்டுபோவார் என்று யாருமே நினைத்திருக்க‌வில்லை.... சிறுவ‌ய‌திலிருந்தே த‌ன‌க்குத்தானே கோடுபோட்டு வாழ‌ப் ப‌ழ‌கிக்கொண்ட‌, அவ‌ர்க‌ளின் ஒரேம‌க‌ன் ராஜ‌கோபால‌ன், தன் த‌ந்தை ம‌ரணிக்கும்போதே ப‌ட்ட‌ண‌த்தில் அர‌சாங்க‌வேலையில் சேர்ந்திருந்தார்.... த‌ன‌க்கு உல‌க‌மாயிருந்த‌ க‌ண‌வ‌ன் திடீரென‌ ம‌றைந்துபோக‌ உயிராய் வ‌ள‌ர்த்த‌ ம‌க‌னிட‌ம் த‌ஞ்ச‌ம‌டைவார் என‌ அனைவ‌ரும் நினைத்திருக்க‌, த‌ங்க‌ள் பெரிய‌ வீட்டை அந்த ஊர்ப் ப‌ள்ளிக்கூட‌த்துக்குக் கொடுத்துவிட்டு ஆர‌ம்ப‌கால‌த்தில் த‌ன் க‌ண‌வ‌ன் க‌ட்டிய‌ சின்ன‌வீட்டில் த‌னியாக‌ப் பாட்டிய‌ம்மா வாழ‌த்துவ‌ங்கியது ஏனென்பது இன்றுவ‌ரை யாரும் அவிழ்க்க‌விய‌லாத‌‌ ஒரு ம‌ர்ம‌ முடிச்சு!! பேரன் ஜீவாவுக்கு ம‌ஞ்ச‌ள்காமாலை தாக்கியிருந்த‌போது பாட்டி போராடிக் காப்பாற்றிய‌ இதேவீட்டில்தான் இன்று அந்த‌ப் ப‌க்க‌த்துவீட்டுக் குழ‌ந்தைக்கு சோறூட்டிவிடுகிறார்!!

 ந‌டு இர‌வில் பாட்டி நினைவுகள் தாலாட்ட ஒருவழியாய் ஜீவா தூங்கிவிட‌..... தொண்டை விக்க‌ல் அட‌ங்கிப்போய்... மறுநாள் காலை, தின‌ம் தின‌ம் வாச‌ல்தெளித்து சுத்த‌ம் செய்த‌ முறைவாசலில் சொந்தப் பேரனின் பாதம் ப‌ட‌ப்போவ‌தை ய‌றியாம‌லேயே தூங்கிவிட்டார் பாட்டிய‌ம்மா!!!


                                                                 6

வ‌ழ‌க்க‌ம்போல் அன்றும் வாச‌ல்தெளித்து மிக‌ச்சுத்த‌மாக‌ மொழுக‌ப்ப‌ட்டிருந்த‌து  பாட்டி வீட்டின் முக‌ப்பு...

கார் க‌தவு திற‌ந்து..... அரிசிமாவில் வ‌ரைந்த‌ எட்டு புள்ளிக் கோல‌த்தில் பட்டுவிடாத‌வாறு எச்ச‌ரிக்கையாய்த் த‌ரையில்தன் கால்ப‌தித்தான் ஜீவா.... வாச‌ல்க‌தைவை மூடும் வ‌ழ‌க்க‌ம்தான் அந்த‌க் கிராம‌த்துக்கே கிடையாதே!! காரிலிருந்து இற‌ங்கி ஒன்றுமே பேசாம‌ல் வீட்டுக்கு உள்ள்ள்ளே... வாச‌லிலிருந்து நேரே தூர‌மாய் அம‌ர்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருந்த, இன்னும் கொஞ்ச‌ம் முதுமைய‌டைந்துவிட்ட த‌ன் பாட்டியைத் த‌லையை ஒருபுற‌ம் ச‌ரித்த‌வ‌னாய்ப் பார்த்த‌வாறே நின்றிருந்தான் ஜீவா!!!!

தூர‌த்தில் நிற்கும், நிழ‌லாய்த் தெரியும் அந்த‌ ம‌ங்க‌லான‌ உருவ‌ம் பாட்டியின் ம‌ன‌தில் மெதுவாகச் சின்ன‌ச் சின்ன‌ ம‌த்தாப்பூக்க‌ளைக் கொளுத்திப் போடத் துவங்கியது... முக‌ச்சுருக்க‌ங்க‌ள் கேள்விக்குறிக‌ளாய் மேலும் சுருங்கி... கையிலிருந்த‌தை அப்ப‌டியே போட்டு விட்டுத் திடீரென‌த் த‌ட‌புட‌லாய் எழுகிறார் பாட்டிய‌ம்மா!!! 

"பேரன்!!!!!"

ஜீவாவின் இமைக்காத‌ பார்வைக்குப் பாட்டியின் சிறு அசைவுகூட‌த் த‌ப்ப‌வில்லை... வேக‌ம்காட்டும் பொருட்டு இருகைக‌ளையும் த‌ரையில் ஊன்றிப் ப‌ல‌ம் திர‌ட்டி எழுந்து அந்த‌ வ‌ய‌திற்கு அதிவேக‌மாய் த‌ன்னை நோக்கி நெருங்கிவ‌ரும் பாட்டி.... உருவ‌ம் தெளிவாக‌த் தெரிந்திடும் தூர‌ம் நெருங்கிய‌தும் கைக‌ளிர‌ண்டையும் உத‌ற‌த் துவ‌ங்கினார் ப‌த‌ற்ற‌மாய்!!

வேக‌ந‌டை ஓட்ட‌மாகி உத‌றிய‌ கைக‌ள் நேரே ஜீவாவின் க‌ன்ன‌ங்க‌ளில் ப‌திந்த‌த‌ன‌!! இய‌ல்பாக‌வே க‌ல‌ங்கியிருந்த‌ க‌ண்க‌ளால் மங்கலாய்த் தெரியும்  காட்சியை முழுதாக‌ ந‌ம்ப‌ இய‌லாத‌து தெளிவாக‌வே தெரிந்த‌து....!

"சொல்லிட்டுப் போன‌ மாதிரியே ஏப்ர‌ல் மாசம் வந்துட்டேனா!!"

ஜீவா சிரிக்க‌....

 " கண்ணீர்மல்க‌ த‌ன் பேர‌னை உச்சிமுக‌ர்ந்தார் பாட்டி பல‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ட‌ந்து......!!

                                                                       7

மஞ்சள் நிற மாலை வெயிலில் கூட வெப்பத்தின் தடயங்கள் தோய்ந்திருக்கின்றன அந்தக் கிராமத்தில்... கரடுமுரடான பாதையில் கவனமாகக் காரை செலுத்துகிறார் ஓட்டுநர்... குளிரூட்டப்பட்ட பின்னிருக்கையில் ஜீவா!! அதே பாதை... ஆனால் இம்முறைப் பயணமோ பாட்டியை விட்டுத் தன் அணுதின வாழ்வை நோக்கி... அந்தக் காரிலும் சரி அவன் வீட்டிலும் சரி இன்னும் இடம் நிறையவே உள்ளது எனினும் பாட்டியின் நினைவுகளை மட்டும் முடிந்தவரை அந்தக் காரில் நிரப்பிக்கொண்டுப் பாட்டியை அந்த‌ச் சிறிய‌ வீட்டிலேயே விட்டுவிட்டுதான் சென்றுகொண்டிருக்கிறான்.... தன்னுடன் வந்துவிடுமாறு பாட்டியிடம் ஜீவா இறுதிவரை ஒருவார்த்தை கூட சொல்லவேயில்லை!!

 "எப்படித் திடீரென்று என்னைத்தேடி வந்தான் என் பேரன்??"

என்று இந்நேரம் பாட்டி நினைத்துக்கொண்டிருக்கலாம் ஆனால் அந்த அழகிய கிராமத்துக் குடில் இன்று சந்தோஷத்தால் நிரம்பிப்போனது மட்டும் நிதர்சனம்.. இயல்பாகப் பனித்திருந்த கண்களைத் தன் கையால் துடைக்கையில் வலதுகையில் பருப்புருண்டைக் குழம்பு வாசம்!!!

சமையலறையில் பாட்டி சமைத்துக் கொண்டிருந்த‌ போது ஜீவா ஓர் அண்டாவைக் கவுத்திப்போட்டு அதன்மேல் அமர்ந்துகொண்டு பாட்டியின் ஒவ்வோர் அசைவையும் அதிசியத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்... விடாது பல கதைகள் பேசிக்கொண்டிருந்தார்கள் பாட்டியும் பேரனும்!....

 சட்டியில் குழம்பு கொதிக்கத் துவங்கிவிட்டது.... பாட்டியோ, வீட்டின் பின்புறம், கொள்ளைப்புற வாழைமரத்தில் இலைவெட்டிக்கொண்டிருந்தார்.... வேகமாக ஓடிவந்து சரியான நேரத்தில் குழம்பைச் சட்டியிலிருந்து இறக்கிவைத்து... ஒருமுறை ருசிபார்த்தபின்புதான் சந்தோஷமாய்ப் பரிமாறினார் தன் கைமணத்தை!!!.... மீண்டும் தனது கையை முகர்ந்து பார்க்கிறான் ஜீவா... பாட்டி வாசம்!!! .....செல்போன் அழைத்தது.... மறுமுனையில் அஞ்சலி!!

"சொல்லுங்க....சொல்லுங்க.... என்ன ஆச்சு?? பாட்டி ஹேப்பியா??"

ஜீவாவுக்கு இணையான ஆர்வமிகுதியில் அஞ்சலி துவங்க மீதமுள்ள பயணம் இனிமையாய் நகர்ந்தது....

"இனிமேலும் என் பாட்டியைத் த‌னிமையில் த‌விக்க‌விட‌ மாட்டேன்" என்று சூளுரைத்துக் கிள‌ம்பிய‌வ‌ன் பாட்டியைத் த‌ன்னுட‌ன் வந்துவிடுமாறு சொல்ல‌க்கூட‌ இல்லை என்ப‌து புதிராக இருந்தது அஞ்ச‌லிக்கு!

"இங்கே கிராமத்துல ராஜா மாதிரி இருக்க வேண்டிய பேரன் வாழ இடமில்லாத நகரத்துல மாட்டிக்கிட்டுத் தவிக்கிறானே!!!" என்று தனக்காகப் பாட்டி பரிதாபப்படுவதை (!)  எப்படி இவளுக்குப் புரியவைப்பதென்று குழம்பிக்கொண்டிருந்தான்....!!!


                                                                      8

த‌ன்னையும் த‌ன் வ‌ள‌ர்ச்சியையும் க‌ண்டுப் பெருமித‌ப் ப‌டுப‌வ‌ர்க‌ளை ம‌ட்டும்தான் க‌ட‌ந்த‌ சில ஆண்டுகளாகவே பார்த்திருக்கிறான் ஜீவா....ஆனால் த‌ன்மீது பேர‌ன்பு கொண்ட தன் பாட்டியோ தன் வாழ்வை நினைத்துத் தனக்காகப் பரிதாபப் பட்டுக்கொண்டிருக்கிறார் என்று அறிந்தபோது அதிர்ந்துதான் போனான் ஜீவா!

 அஞ்சலியும் மௌனமாகிப் போனாள்!!!

"சிட்டியிலேயே ரொம்ப‌க் காஸ்ட்லியான‌ அபார்ட்மெண்டில் சொந்த‌வீடு, இவ்வ‌ள‌வு சின்ன‌ வ‌ய‌சிலேயே வாங்கியிருப்பதுதான் ப‌ரிதாப‌நிலையா???'"

என்று இப்போது கேட்கும் அஞ்ச‌லியைப் போலத்தான் ஜீவாவும் எண்ணினான்.... ஆனால் பாட்டி....

"ஒரே க‌ட்ட‌ட‌த்துக்குள்ள மூச்சப் பிடிச்சுக்கிட்டு நாப்ப‌த்துயேழு வீட்டக் கட்டிவெச்சிருக்கான் ....வாசக்க‌த‌வ‌க்கூட‌ திற‌ந்து வெச்சுக்க‌ முடிய‌ல‌... ஆசையா ஓர் ஆட்டுக்குட்டி வ‌ள‌ர்க்க வழியிருக்குமா??"

என்று கேட்டால் பாவம் என்னதான் பதில் சொல்லுவான் ஜீவா!!!

பூமியைத் தொழுது நிலத்தை உழுது வாழும் ம‌ண்வாச‌னை ம‌னித‌ர்க‌ளுக்கு சொந்த‌ பூமியில் வேய்ந்த குடிசை பெருமித‌மாக‌வும், அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆட‌ம்ப‌ர‌வீடுக‌ள் அந்த‌ர‌த்தில் அம்மாஞ்சிகள் வாங்கிப்போடும் அசையா சொத்தாக‌வும்தான் தெரிகிறது போலும்!!

அடுக்குமாடிக‌ளின் இன்றிய‌மையா தேவையான‌ லிஃப்டுக‌ளை ம‌னித‌ர்களின் வெளிஉல‌க‌த்தொட‌ர்பைத் துண்டிக்கும் வில்லனாக‌ விம‌ர்சிக்கிறார் பாட்டி!! (பாட்டிக்கு லிஃப்டை இயக்க‌த்தெரியாது.... ப‌தினோருமாடிக்கு ப‌டிக்க‌ட்டில் போவ‌தும் முடியாத‌ காரிய‌ம்.. அந்த‌ ஆற்றாமைதான்!!)

இதையெல்லாம் கூட‌ப் பொறுத்துக் கொண்டான் ஜீவா... மிக‌ப்பெரிய சாக்லேட் க‌ம்பெனியின் ரீஜின‌ல் ஹெட் என்ற தன்னுடைய அல‌ங்கார‌ப் பத‌வியைப் பாட்டி, த‌ன் பேர‌ன் ஒரு "மிட்டாய் க‌ம்பெனி"யில் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு உழைத்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் கணித்திருக்கிறார் என அறிந்த கணத்தில் பாட்டியின் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் "ஜீவா"வின் வறுமை (!) நிலையைப் புரிந்துகொண்டுப் பேச வார்த்தையின்றி அமைதியானான்!!!

அத்தோடும் விடவில்லை பாட்டி...... ப‌க்க‌த்து வீட்டு அல‌மேலுவின் ம‌க‌ன் அந்த‌ கிராம‌த்தில் ப‌டித்த‌வ‌ன்தான் என்றாலும் ஒரு பெரிய்ய்ய்ய‌ மோட்டார் க‌ம்பெனியில் வேலைபார்ப்ப‌தாக‌ப் பெருமையாய்க் கூறினார்!!

"என் பேர‌ன் பாவ‌ம்ப்பா உன்னைவிட‌ அதிக‌மாப் ப‌டிச்சிட்டு ஏதோவொரு மிட்டாய் க‌ம்பெனியில‌ வேலை பாத்துட்டு இருக்கான்... உன்ன‌ப்போல‌ ந‌ல்ல‌ பெரிய‌ க‌ம்பெனில‌ உத்தியோக‌ம் எதுவும் கிடைச்சா அவ‌னுக்கும் சொல்லுப்பா!!"

என்று அவ‌னிட‌ம் பாட்டி சொல்லி வைத்திருந்ததை நல்லவேளை ஜீவாவிடம் பாட்டி சொல்லவில்லை!!

எக்க‌ச்ச‌க்க‌ ஆசையோடு பெருமையாய்ப் போனவன் இப்படி எக்குத்தப்பாய் 'டேமேஜ்' ஆகிப்போயிருக்கும் த‌ன் வருங்காலக் கணவனுக்கு ஆறுத‌ல் சொல்ல‌வா?... என்ன‌ சொல்லவோ? என்று மௌன‌மாகவே இருந்தாள் அஞ்சலி.... இன்னொருபுற‌ம் அவனது பேச்சைவைத்து இந்த‌க் கணம் அவ‌ன் முக‌த்தைக் கணித்துப் பார்க்கையில் அவளுக்குக் கொஞ்ச‌ம் சிரிப்பும் வ‌ந்த‌து...!!

இவற்றையெல்லாம் தாண்டி.. அந்த‌ச் சிறிய‌ கிராம‌த்து வீட்டில் வ‌சிப்ப‌தில் பாட்டியிட‌ம் ஒரு க‌ம்பீர‌த்தைக் கவனித்தான் ஜீவா..... தாத்தாவுடைய‌ ப‌டைபுலன்க‌ளுட‌ன் தான் வாழ்ந்த‌ பெரிய‌ வீட்டைப் புற‌க்க‌ணித்துவிட்டு, க‌ண‌வ‌ன் ம‌னைவியாய் ஆர‌ம்ப‌கால‌த்தில் அவர்கள் வாழ்க்கையைத் துவ‌க்கிய, வ‌ச‌திக‌ள‌ற்ற இந்தச் சிறிய‌ வீட்டில் பாட்டி தனியாக வாழ்ந்துவருவதில் ஏதோவொரு ஜீவனுள்ள அர்த்தமுள்ளது என்றும் ,பிடிவாதமாய்த் தனக்குத்தானே பாட்டி  ஏற்படுத்திக்கொண்ட இந்தத் த‌ன் த‌ந்தையும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் எண்ணுவ‌தைப்போல வெறும் "வ‌ற‌ட்டுப் பிடிவாத‌ம்" கண்டிப்பாக இல்லை என்றும் ஜீவாவால் தெளிவாக‌ உண‌ர‌முடிந்த‌து......


                                                                                                                        தொடரும்.......

11 comments:

  1. உறவுகள்,அன்பு,பாசம்ன்னு பாட்டியைக் கட்டிப் போட்டிருக்கிறது.அவர் தனித்தில்லை.அது மட்டும் புரிகிறது.தொடருங்கள் பிரபு.இரண்டு பதிவையும் ஒன்றாக வாசித்துவிட்டேன் !

    ReplyDelete
  2. Thank you soooooo much akkaa.... :-)
    சத்தியமா இதை யாரும் வாசிப்பாங்கன்னு நான் நினைச்சுப் பார்க்கல!!! :)
    (இவ்ளோ பெருசா எழுதினா நானே வாசிப்பேனா என்பது சந்தேகம்தான்!!)
    ஒரு குறும்படமா எடுக்கணும்னு ரொம்ப நாள் முன்னாடி சும்மா நானா முயற்சி செய்த ஒரு திரைக்கதை இது.... அதை எழுத்தில் கொண்டுவந்ததில் கதையில் எதை சொல்வது எதை விடுப்பது என்று ஏகப்பட்ட தடுமாற்றங்கள் என் கண்ணுக்கே தெரியுது!!! :)

    ஸோ ஸ்வீட் ஆஃப் யூ ஹேமா அக்கா :-)

    Thanks for reading... யாரும் வாசிக்க மாட்டாங்கன்னு ரொம்ப கேஷுவலா பதிவு செய்துட்டு இருந்தேன்.... ஐயோ இப்போ சீரியஸா பண்ணனுமே!!!

    ReplyDelete
  3. க‌ண‌வ‌ன் ம‌னைவியாய் ஆர‌ம்ப‌கால‌த்தில் அவர்கள் வாழ்க்கையைத் துவ‌க்கிய, வ‌ச‌திக‌ள‌ற்ற இந்தச் சிறிய‌ வீட்டில் பாட்டி தனியாக வாழ்ந்துவருவதில் ஏதோவொரு ஜீவனுள்ள அர்த்தமுள்ளது என்றும் ,பிடிவாதமாய்த் தனக்குத்தானே பாட்டி ஏற்படுத்திக்கொண்ட இந்தத் த‌ன் த‌ந்தையும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் எண்ணுவ‌தைப்போல வெறும் "வ‌ற‌ட்டுப் பிடிவாத‌ம்" கண்டிப்பாக இல்லை என்றும் ஜீவாவால் தெளிவாக‌ உண‌ர‌முடிந்த‌து......


    ........இந்த ஆத்மார்த்தமான உணர்வை, நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை என்று ஒரு பாட்டி, எங்க ஊரில் சொல்ல கேட்டு இருக்கேன். இந்த கதை, அதற்கு விளக்கம் சொல்லுவது போல உள்ளது. நல்லா கதை விடுறீங்க.... சாரி, நல்லா கதை எழுதுறீங்க..... ஹா,ஹா,ஹா,ஹா...

    ReplyDelete
  4. நானும் அதே மாதிரி ஒரு பாட்டியைப் பார்த்துத்தான் அக்கா இந்தக் கதையை எழுதினேன் :‍-)
    ரொம்ப நன்றி அக்கா :)

    ReplyDelete
  5. ஜீவாவின் இமைக்காத‌ பார்வைக்குப் பாட்டியின் சிறு அசைவுகூட‌த் த‌ப்ப‌வில்லை... வேக‌ம்காட்டும் பொருட்டு இருகைக‌ளையும் த‌ரையில் ஊன்றிப் ப‌ல‌ம் திர‌ட்டி எழுந்து அந்த‌ வ‌ய‌திற்கு அதிவேக‌மாய் த‌ன்னை நோக்கி நெருங்கிவ‌ரும் பாட்டி.... உருவ‌ம் தெளிவாக‌த் தெரிந்திடும் தூர‌ம் நெருங்கிய‌தும் கைக‌ளிர‌ண்டையும் உத‌ற‌த் துவ‌ங்கினார் ப‌த‌ற்ற‌மாய்!! //

    சகோ...என் குழந்தை பருவம் பெரும்பாலும் என் பாட்டி(ஆச்சி) வீட்டில் தான் கழிந்தது...சேம்..சேம்..இந்த பாட்டி மாதிரி தான் என் ஆச்சி...அப்படியே படிக்க படிக்க என் நினைவலைகள் என் சிறுவயதை நோக்கி...

    ReplyDelete
  6. //வேக‌ம்காட்டும் பொருட்டு இருகைக‌ளையும் த‌ரையில் ஊன்றிப் ப‌ல‌ம் திர‌ட்டி எழுந்து அந்த‌ வ‌ய‌திற்கு அதிவேக‌மாய் த‌ன்னை நோக்கி நெருங்கிவ‌ரும் பாட்டி.//

    இந்த வரிகள் ரொம்பவே டச்சிங் எனக்கு...

    ReplyDelete
  7. /த‌ன் பேர‌ன் ஒரு "மிட்டாய் க‌ம்பெனி"யில் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு உழைத்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் கணித்திருக்கிறார் என அறிந்த கணத்தில் பாட்டியின் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் "ஜீவா"வின் வறுமை (!) நிலையைப் புரிந்துகொண்டுப் பேச வார்த்தையின்றி அமைதியானான்!!! //
    ha ha..so cute...என் ஆச்சி க்கு கூட இந்த அறியாமை...வெகுளித்தனம் இருக்கும்...நிறைய வாட்டி சிறுவயதில் சிரிச்சுருக்கேன்...அப்படி சொல்லும்போது கூடகொஞ்சம் என் பாட்டியை எனக்கு புடிக்கும்...:)))

    ReplyDelete
  8. //இவற்றையெல்லாம் தாண்டி.. அந்த‌ச் சிறிய‌ கிராம‌த்து வீட்டில் வ‌சிப்ப‌தில் பாட்டியிட‌ம் ஒரு க‌ம்பீர‌த்தைக் கவனித்தான் ஜீவா..... //

    தாத்தாவின் மரணத்துக்கு பின்னாடி என் தந்தை கூட எவ்வளவோ கூப்ட்டும் என் பாட்டியும் வர மறுத்துட்டாங்க...இன்னும் ராணி மாதிரி தனியா தான் லைப்..எப்போ பார்க்க போனாலும் யாரவது ஆச்சி வீட்டில் சாப்டுட்டு இருப்பாங்க...இல்லை பேசிட்டு இருப்பாங்க..இலல்ட்டி பூஜை நடக்கும்...அது அவங்க உலகம் இல்லையா பிரபு...அவங்களுக்கு அது தான் சொர்க்கம்...ரொம்ப லயிச்சு படிச்சேன் ...தேங்க்ஸ் டு ஷேரிங் சகோ...:)))

    ReplyDelete
  9. //சகோ...என் குழந்தை பருவம் பெரும்பாலும் என் பாட்டி(ஆச்சி) வீட்டில் தான் கழிந்தது...சேம்..சேம்..இந்த பாட்டி மாதிரி தான் என் ஆச்சி...அப்படியே படிக்க படிக்க என் நினைவலைகள் என் சிறுவயதை நோக்கி... //

    நன்றி சகோ.... என் கதையும் அதேதான்... அப்பா அம்மா ரெண்டு பேருமே வேலைக்கு போறவங்க ஸோ... மேக்ஸிமம் டைம் என் அம்மாச்சி வீட்டுலதான் இருந்திருக்கேன் :)

    ReplyDelete
  10. //ha ha..so cute...என் ஆச்சி க்கு கூட இந்த அறியாமை...வெகுளித்தனம் இருக்கும்...நிறைய வாட்டி சிறுவயதில் சிரிச்சுருக்கேன்...அப்படி சொல்லும்போது கூடகொஞ்சம் என் பாட்டியை எனக்கு புடிக்கும்...:)))//

    சீரியஸ்லி சகோ....
    நான் மலேஷியால வேலை கிடைச்சு போனப்போ கூட...
    ராத்திரி பகலா கண்முழிச்சுக் கஷ்டப்படுற வேலைன்னு எங்க அம்மாச்சி அக்கம்பக்கத்துக்கு எல்லாம் சொல்லிவைக்க.... ஆசையா லீவுல பார்க்க வந்த என்னை "எதுக்குப்பா இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிச்சிட்டுக்கிட்டு!!" என்று பாட்டிவீட்டு நெய்பர்ஸ் எல்லாம் என்னை துக்கம் விசாரிக்க ஆரம்பிச்சப்போ வந்த எரிச்சல் இருக்கே.... ஹஹஹஹா..... அப்புறமா உன் பேரன் அங்கே சந்தோஷமாத்தான் இருக்கான்னு ஃபோட்டோஸ் எல்லாம் காட்டித்தான் நம்ப வெச்சேன்.... ஆனா அவங்க கருத்தை மாத்திக்குறதாயில்ல... வேலையை விட்டு வந்தப்புறம்தான் சந்தோஷப்பட்டாங்க!

    ReplyDelete
  11. //அது அவங்க உலகம் இல்லையா பிரபு...அவங்களுக்கு அது தான் சொர்க்கம்...ரொம்ப லயிச்சு படிச்சேன் ...தேங்க்ஸ் டு ஷேரிங் சகோ...:)))/

    many thanks for reading my dear sago!!! :-)))

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)