பாகம் - 1
பாகம் - 2
பாகம் - 3
பாட்டி கதை (பாகம் - 4)
12
வேகவேகமாகத் திருமண வீடாகக் களைகட்டத் துவங்கியிருந்தது ஜீவாவின் வீடு!!... வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வந்த கையோடு அப்பா திருமண ஏற்பாடுகளில் பரபரப்பாகிறார்.... அம்மா அழைப்பிதழ்களின் ஓரங்களுக்கு மஞ்சள் இட்டுக் கொண்டிருக்கிறார்... இதோ அடுத்த வாரம் அவர்கள் வீட்டிலேயே நிச்சியதார்த்த விழா.... தொடர்ந்த இரண்டாவது வாரம் திருமணம்!!!.... பரீட்சை முடிந்து நாளைக்கே அஞ்சலி வந்துவிடுவாள் அவர்கள் வீட்டுக்கு!! அடுத்த இரண்டு நாட்களில் அஞ்சலியின் பெற்றோரும் வந்துவிட நிச்சியதார்த்தம் இனிதே நடக்கப்போகிறது.... ஜீவாவுக்கோ, வீட்டில் இல்லையெனத் தெரிந்தும் அந்த வெறுமையில் பாட்டியைத் தேடுகின்றன கண்கள்.... தன் வீட்டில் பாட்டிக்கு இடம்தேட ஆரம்பித்துவிட்ட ஜீவாவின் மனது "பாட்டி வீடு" என்று தன்னைவிட்டுத் தனியாக ஓர் இடம் இந்த உலகில் இருப்பதை இனியும் ஏற்றுக்கொள்ளும் பொறுமையை இழக்கத் துவங்கியிருந்தது... காரணம்... பாட்டியைத் தேடும் பாசம் மட்டுமே....
ஒரு கார் ஷோரூமிலிருந்து அழைப்பு வருகிறது ஜீவாவின் அலைபேசிக்கு...அவர்களின் லேட்டஸ்ட் மாடல் காரை "டெஸ்ட் டிரைவ்" செய்துபார்ப்பதற்கு இன்று மாலை ஷோரூமிற்கு வரலாம் என்று கண்ணியமாக அழைப்பு விடுக்கிறார்கள்!!
"கண்ட காரை வாங்கி ஏமாந்துடக் கூடாது கண்ணு..... தாத்தா வெச்சுருந்தாரு பாரு வெள்ளைக் கலர் அம்பாசிடர் காரு... அதேமாதிரி காரையே நீயும் வாங்கிடுப்பா... நமக்கு ராசியான காருய்யா அது!!!"
ஓட்டுநர் இன்றித் தன் கம்பெனி காரை இம்முறை தானே பாட்டிவீடு நோக்கி ஓட்டிச்சொல்லும் ஜீவா சிரித்துக் கொள்கிறான் தன் பாட்டியை நினைத்து!!
"இதை எப்படி சமாளிக்கப் போறீங்கனு நான் பாக்குறேன் பேராண்டீ !!!"
அஞ்சலியிடம் ஆரோக்யமாய் சவாலை ஏற்றுக்கொண்ட ஜீவா தீர்க்கமாக உள்செல்கிறான் தன் பிரியமான பாட்டி வீட்டுக்குள்!!
இந்த முறை எல்லாமே முன்பே திட்டமிடப் பட்டிருந்தது... சொல்லியிருந்த நேரத்துக்கு முன்னதாகவே கிளம்பித் தயாரா இருந்த பாட்டி பதற்றமே இல்லாம முதன்முறை தன் வீட்டிற்கு சொல்லிட்டு வரும் பேரனுக்காகக் காத்துக்கொண்டு இருந்தார்.... ஏகப்பட்ட சர்ப்ரைஸ்களைப் பாட்டிக்குத் தரத் திட்டம் போட்டிருந்த ஜீவாவுக்கு பாட்டி கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்.... "ரெடியா இருங்க பாட்டிம்மா!" என்று சொல்லி ஃபோனை வைத்துக் காரை ஜீவா ஸ்டார்ட் செய்யும் கால அவகாசத்தில் சலித்தக் கடலைமாவில் கல்கண்டு சேர்த்துக் கிண்டி சூடுபறக்க உருண்டை பிடித்து சுடச்சுட மூன்று லட்டுகளை ஜீவாவுக்கு ஊட்டிவிட்டு அசத்தியது!!!
தயாராக இருந்த பாட்டியை மிகவும் மகிழ்ச்சியாகக் காரின் முன்னிருக்கையில் அமர வைத்துப் பாசமாய் ஸீட் பெல்ட் பொருத்திவிடுகிறான் பேரன்.... சரியான அளவில் குளிரூட்டப்பட்ட காரில் பாட்டியின் முகபாவங்களைக் கவனித்தவாறே காரை அலுங்காமல் செலுத்தினான்!!! அமைதியாய்.. வசதியான இருக்கையில் "ஜம்" மென்று கம்பீரமாய் அமர்ந்து வரும் பாட்டி அந்த காரின் சொகுசான வசதிகளைப் புதிதாகப் பார்க்கிறார்...!!
தென்றல்போல மெலிதான குளிர்ச்சியை இதமாய்த் தெளிக்கும் ஏசி... சுவாசத்துக்குச் சுகமாய் கார் ஃப்ரெஷ்னரின் வாசம்..... பூப்போல இயங்கும் கியரும், பவர் ஸ்டியரிங்கும்..... கொஞ்சமும் இரைச்சலின்றி பள்ளம் மேடுகளில் அமுங்கிக் கொடுத்து அமைதியாய் ஊர்ந்து செல்லும் அந்த ஊர்தியின் உள்புற அழகை அதிகம் அசையாமல் கண்களை மட்டும் உருட்டிப் புதிதாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் பாட்டி.... அப்போது "இளைய நிலா.... பொழிகிறதே...!!" எனக் காருக்குள் இளையராஜா தாலாட்ட ஆரம்பித்தார்.... வண்டியை ஓட்டிக்கொண்டே ஓரக்கண்ணால் தன் பாட்டியை ஒரு குழந்தையாய்ப் பார்த்துப் புன்னகைக்கிறான் ஜீவா!!... ஊரைவிட்டு வெளியேறியது வாகனம்..... ஜீவா வேகமெடுக்க ... இயல்பாய் கண்கள் சொருகித் தூங்கிப்போனார் பாட்டியம்மா!! ராஜசயணம்!! :-)
13
முன்னதாக முந்தைய நாளில்.... ஜீவா பாட்டியிடம் தான் ஏதோவொரு காரை வாங்கி ஏமாறத் தெரிந்ததாகவும் இப்போது பாட்டியின் அறிவுரைக் கேட்டுதான் (!) தெளிவடைந்து விட்டதாகவும் கூறினான்.... பாட்டியின் மகிழ்ச்சி குறையுமுன்பே.... ஜீவா,
" எல்லா கம்பெனிகாரர்களூம் எங்க காரை வாங்குங்கனு ஒரே தொந்தரவு பாட்டிம்மா..... உங்க பேரன் ஏமாறுவானா!! தெளிவா சொல்லிட்டேன் என் பாட்டி சம்மதம் சொல்லுற காரைத்தான் நான் வாங்கப்போறேன்னு!!"
...
கொஞ்சம் இடைவெளிவிட்டு மெதுவாக....
"அதனால நாளைக்கு நம்ம ரெண்டுபேரும் சிட்டில இருக்குற எல்லா கார் ஷோரூமுக்கும் போறோம்!! எல்லா காரையும் பாத்துட்டுக் கடைசியா பாட்டிம்மாக்குப் பிடிச்ச காரா பாத்து வாங்குறோம்!!
!"
என்று நைஸாக சொருகினான்.....எந்தவொரு பதிலுக்கும் பாட்டி தயாராகும் முன்பே....
"நாளைக்கே பாட்டிம்மா நம்ம வீட்டுக்கு வந்திடணும்.... உங்க ஒரே பேரனுக்கு நடக்கப்போற ஒரே கல்யாணம் இது.."
என்று எப்படியோ சிரிக்க வைத்துப் பேசிப்பேசியே பாட்டியைத் தன் பக்கம் தன் வீடு நோக்கித் தன் வாழ்க்கைக்கு செல்லப்பேரமொழிபேசி மெல்ல மெல்ல நகர்த்தியிருந்தான்!!!
இன்று.... ஜீவா தன் காரில் சிட்டிக்குள் நுழைந்தபின்னும் அகலவில்லைப் பாட்டிம்மாவின் அனந்த சயனம்... தூங்கும் பாட்டியை பார்த்துப் பார்த்தே அலுங்காமல் ஓட்டி வந்தான் தன் ஊருக்குள்!!
14
சுகமான பயணத்தில் தூங்கிப்போன பாட்டி ஒரு ஹாரன் சத்தத்தில் திடீரெனக் கண்விழித்தபோது கண்முன்னே முற்றிலும் ஒரு புதிய உலகம் பரபரவென இயங்கிக் கொண்டிருந்தது....
கிழக்கு நோக்கி மேலேறித் திடுமென வடகிழக்கில் வளையும் ஒரு ஃப்ளைஓவரில் அனாயசமாக காரை வளைத்துக் கொண்டிருந்தான் ஜீவா.....இப்போது பாட்டிக்கு வண்டியின் வேகம் புலப்படுகிறது.... ப்ளைஓவரின் மேலேயிருந்து ஜன்னலில் தலைக்குக்கீழே ரோட்டின் இருபுறமும் நகர இடமின்றி அடைத்துக்கொண்டு முன்னேறும் நூற்றுக்கணக்கான கார்களும் பஸ்களும் அரற்ற.... அந்த இடைவெளிகளிலும் கபடியாடும் வித்தியாசமான பைக்குகளையும் பார்க்கத் தலைசுற்றியது பாட்டிக்கு....
நான்கு ரோடுகள் சந்திக்கும் ஒரு பிரம்மாண்ட சிக்னலில் முதல்வரிசையில் அவர்கள் கார் நிற்கிறது..... சுற்றிமுற்றி நாற்புறமும் ஆக்ஸலேட்டர்களை முறுக்கிக் கொண்டுக் காத்திருக்கும் அவசரம் ஒரு போர்க்களத் தோற்றத்தைக் கொடுத்தது பாட்டியம்மாவுக்கு!!
குழப்பமான சிகப்பு பச்சை ஒளிவிளையாட்டில் பதற்றமாய்ப் பங்குபெறும் பாதசாரிகளையும்... அஸ்தமன வேளையின் கோபமான ஹாரன்களிலும் உண்மையிலேயே கொஞ்சம் கிறுகிறுத்துப் போன பாட்டியம்மா.... இந்தத் திடீர் பரபரப்புகள் ஒவ்வாமல் கொஞ்சம் உடல்குறுக்கிக் கஷ்டமாய்த் தன் கைகளால் காதுகளை மூடிக்கொள்ளப் போனார்.... அப்போது அருகிலிருந்த கியர் மாற்றும் கரம் பாட்டியின் கையைப் பாசமாய்ப் பற்றிக்கொண்டது.....!!!
முற்றிலும் புதிய சூழலில் பழக்கப்பட்டப் பாசமான அந்த ஸ்பரிசம் தான் தூக்கிவளர்த்த பேரனுடையது என்று மனம் அறிந்த கணம் சில்லிடும் ஓர் அற்புதமான உணர்வை அனுபவித்தார் பாட்டியம்மா.... !!! அதுமுதல்.... பட்டணத்து மிரட்டலைச் சந்திக்கும் புதுத்தெம்போடு இப்போது, ரகரகமாய் மின் விளக்குகள் கலர்க்கோலம் போட்டிருக்கும் பட்டணத்து மாலை அழகை ஜன்னல் வழியே ரசிக்கத் துவங்கினார் கிராமத்துப் பாட்டிம்மா!!!
தரையிலிருந்து பிரம்மாண்டமாய் எழுந்து நின்ற ஒரு கார் ஷோரூமில் கால்பதித்து இறங்கினார்கள் பாட்டியும் பேரனும்...
முதல்நாள் ஸ்கூல்செல்லும் பிள்ளைபோல் புதிதான அந்த சூழலில் பாட்டிம்மா முற்றிலும் சரணடைந்துவிட்டதோர் உடல்மொழியை வெளிப்படுத்தித் தயங்கி ஒடுங்கி நின்றார்... பாட்டியின் சின்னச் சின்ன அசைவுகளைக் கூட இப்போது மொழிபெயர்க்கத் தெரிந்துகொண்ட ஜீவா... காரிலிருந்து இறங்கிக் கொஞ்சம் குறுகி நின்ற பாட்டியின் தோள்பிடித்து உள் அழைத்துச் சென்றான்.....
"ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட்" என்று அலட்டிக்கொள்ளும் மாபெரும் பிரம்மாண்ட கார் ஷோரூம் அது!! ஸ்டுடியோ எஃபெக்டில் மிரட்டலாய் அழகழகு கார்கள் பேராண்மையுடன் கம்பீரமாய் மின்னொளியில் ஜொலித்துக்கொண்டு டயரூன்றி(!) நின்றுகொண்டிருக்கின்றன..
...
"ஹலோ ஐம் சீதாராமன்"
என்று தானாகவே ஜீவாவிடம் அறிமுகமாகிக்கொண்டார் ஓர் எக்ஸிகியூட்டிவ்!! படுஸ்மார்ட்டான ஓபனிங்.... கொடுத்துக் கை குலுக்கிக் கொண்ட அந்த இளம் எக்ஸிகியூட்டிவ் தன் கார் மார்க்கெட்டிங் தொழில்வாழ்வின் மிக வித்தியாசமானதொரு சத்தியசோதனையை இன்னும் சிறிது நேரத்தில் சந்திக்கப்போவதை அப்போது உணர்ந்திருக்கவில்லை....!!
தொடரும்.......
அடுத்த பாகம் இங்கே!
நானும் பாட்டி கதைகள் எத்தனையோ கேட்டு இருக்கிறேன். ஆனால், பாட்டியின் தொடர்கதைகள் - இதுவே முதல் தடவை..... ம்ம்ம்ம்.... அப்புறம் என்ன ஆச்சு? சொல்லுங்க..... :-)
ReplyDeleteஉங்கள் பாட்டிக்கதை தொடரை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் நேரமின்மையால் படிக்க முடியவில்லை.... நீங்கள் வேறு தினம் ஒரு பாகம் என்ற ரேஞ்சில் வேகமாக போய்க்கொண்டிருக்கிறீர்கள்... வார இறுதியில் படித்து பின்னூட்டமிட முயல்கிறேன்...
ReplyDeleteநன்றி சித்ரா அக்கா :))
ReplyDeleteகாலம்காலமா பாட்டிகள் தான் கதை சொல்லிட்டு இருக்காங்களே.....
நாம ஒரு கதை பாட்டியை வெச்சு சொல்லுவோமேன்னு தான்!!!ஹிஹிஹி:)
ரொம்ப நன்றி பிரபாகரன் :)
ReplyDeleteஓகே... கொஞ்சம் கேப் விட்டுடுவோம்... அடுத்த பாகம் வீகெண்டில் போஸ்ட் பண்ணிட்டா போச்சு!
இன்னும் இரண்டு அல்லது மூணு பாகம் வரும் கதை!
ரொம்ப ரொம்ப நன்றி நண்பா....
அன்புடன்,
பிரபு எம்
உங்கள் தொடரை படிக்க முடிந்தாலும் கருத்துரை எல்லவற்றுக்கும் இட முடியல மன்னிக்கவும்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4
ம்ம்...இன்னும் தொடர்கிறேன் பிரபு.பாட்டி தாத்தாவின் நினைவோடயே பேரனின் வாகனத்தையும் எதிர்பார்க்கிறார்.
ReplyDeleteபாவம்தான் ஜீவா !
நன்றி ஹேமா அக்கா :)
ReplyDeleteஅடுத்த பாகம் கொஞ்சம் இடைவெளிவிட்டு! :)
ஒருவழியா இந்த எபிசொட் டும் படிச்சுட்டேன்...(சகோ...ஏதாவது பூர்வ ஜென்மத்தில் கடன் உடன் வாங்கிருந்தேனா...வட்டியோட இப்படி பார்ட் பார்ட் ஆ போட்டு பழி வாங்குற மாதிரி இருக்கு...:))) ) நல்லா போகுது தொடர்கதை..தமிழ் சினிமா மாதிரி இந்த எபிசொட் இல் எதாவது விபத்து ஆகி சோகத்தில் எதாவது முடியபோகுதொனு உதறலா தான் இருந்துச்சு...பட் காமடி அண்ட் பாசத்தோட கதை போகுது...சொதப்பாமல் தொடர வாழ்த்துக்கள்...இல்லாட்டி சத்தியமா சயனைடு தான்...:)))) நம்ம ஊரு விசிட் ஆ ? சூப்பர்...happy chirstmas and happy newyear wishes சகோ !! விருதகிரி படம் மறக்காமல் பார்த்திருங்க..இது தான் நாம நம்ம ஊருக்கு செய்ற பிரதிபலன்....ஹ ஹ ஹ..
ReplyDeleteநன்றி சகோ.. :))
ReplyDeleteஇன்னும் மூணே (!) பாகம்தான்....ஹிஹி
என்னது கார் ஆக்ஸிடெண்டா?? ரைட் இப்போ புரியுது நீங்க "விருதகிரி" பார்த்திருக்கீங்க...கரெக்டா!! :-)
பின்னே ஊருக்கு வந்துட்டு விருத்தாச்சலம் எம்.எல்.ஏ படம் பார்க்காமலா??? பார்த்துட்டு விமர்சனம் எழுதுவோம்ல.... அதையும் நீங்க படிக்கணுமே!! (எனக்கு சயனைட் எல்லாம் தேவையேயில்ல சகோ...ஹஹஹாஆ:)))
அசத்துங்க!
ReplyDeleteமூன்று பகுதி முடிந்துவிட்டதா........ படித்துவிட்டு வருகிறேன்........
ReplyDelete