Tuesday, January 04, 2011

பாட்டி கதை (பாகம் 6)

  பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5   


                                                   பாட்டி கதை (பாகம் 6)
                                                                                                                           

                                                                         19

தன் வீட்டிலேயே பாட்டியும்... கூப்பிடும் தூரத்தில் அஞ்ச‌லியும் இருக்க ஆன‌ந்த‌மாய் விடிந்தது அந்த‌ப் புதுப் பொழுது!!  திரும‌ண‌ப் ப‌ர‌ப‌ர‌ப்பும் இல்லாம‌ல் இல்லை ஜீவாவுக்கு! நாளை மறுநாள் நிச்சயதார்த்தம்.... மனமெங்கும் சந்தோஷ அலைகள் கரைநனைக்க...... அன்றைய தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வ‌ந்த‌ ஜீவாவிட‌ம் பாட்டி தான் தன் பேரனுக்காகத் தேர்வு செய்துவைத்திருக்கும் காரைக் கொடுத்தார்!!!

ஆச்சர்யமாக.... ஓர் இன்ப அதிர்ச்சியாக..... பாட்டி தேர்வுசெய்து கொடுத்த கார், பாட்டியிடம் பேசுவதற்குமுன்பாக‌ ஜீவா தான் வாங்கப்போவதாய் முடிவுசெய்திருந்த அதே காராகவே இருந்தது....!! அஞ்சலியின் மனதைப் பாட்டி எப்படித்தான் படித்தாரோ அவளுக்குப் பிடித்த அதே மெட்டாலிக் கரும்பச்சை நிறத்திலேயே காரைத் தேர்வுசெய்திருந்தார் பாட்டியம்மா!!

த‌ன் கையிலிருக்கும் அதிசிய‌த்தை ஜீவாவால் ந‌ம்ப‌ முடிய‌வில்லை.... அம்பாசிட‌ர் காரை வாங்க‌ச்சொன்ன‌ பாட்டியம்மாவுடன் முற்றிலும் மூளைக்க‌ல‌ப்பில்லாது முழுக்க‌ முழுக்க‌ உண‌ர்வுப்பூர்வ‌மான‌தொரு ப‌ரிசோத‌னை முய‌ற்சியில் ஈடுப‌ட்டு ஒரு பேர‌னாய் அபார‌வெற்றி க‌ண்டுவிட்ட‌து க‌ண்கூடாக‌க் கையில் ப‌ள‌ப‌ள‌க்கிற‌து த‌ன் க‌ன‌வுகாரின் கையேடாக‌!!!

இந்த‌முறை பேர‌னின் ச‌ந்தோஷ‌ ர‌ச‌வாத‌த்தை அவ‌ன்முக‌த்தில் சிறு அசைவையும் மிச்ச‌ம் வைக்காம‌ல் க‌ண்க‌ளால் அள்ளிய‌து க‌ண்ணாடி போட்ட‌ பாட்டிய‌ம்மா!! இன்ப‌ அதிர்ச்சியில் திக்குமுக்காடிய பேரன் அப்ப‌டியே பாட்டியின் கால்களைத் தொட்டு ஆசீர்வாத‌ம் வாங்கினான்...

"அப்போ அம்பாஸிட‌ர் கார் வேணாமா பாட்டிம்மா??!!"

என்று குறும்பாய்க் கேட்ட‌ பேர‌னின் க‌ன்ன‌த்தைக் கிள்ளிச் சிரித்து த‌ள‌ர்ந்த‌ ந‌டையாய் த‌ன் அறை நோக்கிச் சென்றார் பாட்டிய‌ம்மா.....

குதூக‌ல‌ம் க‌ண்ணை ம‌றைத்திருக்க‌ ச‌ந்தோஷ‌ப் பாட்டியின் ந‌டையின் கூடுத‌ல் த‌ள‌ர்ச்சியை ஜீவா க‌வ‌னிக்க‌வில்லை....   

                                                                           20

இந்த‌வொரு அதிசிய‌ம் எப்ப‌டிச் சாத்திய‌மான‌து என்று ஜீவாவின் ம‌ன‌ம் அதிக‌ம் யோசிக்க‌வில்லை.... குறுகிய‌ இடைவெளியில் அன்று சிறுவனாக இருந்த‌ த‌ன்னுடைய‌ குறிப்பை அறிந்து இனிப்பும் கார‌முமாய் மாறிமாறி ம‌கிழ்வித்த‌க் கொஞ்ச‌ம் இள‌மையான‌ பாட்டிய‌ம்மாவுட‌னான‌ ப‌ழைய‌ ஃப்ளாஷ்பேக் காட்சிக‌ளோடு இணைத்து இன்று கையில் இருக்கும் இந்த‌ அதிசிய‌த்தைக் கோர்த்துப் பார்த்த‌ ஜீவாவுக்கு ம‌ன‌ம் ச‌ந்தோஷ‌ம் என்னும் வார்த்தையைத் தாண்டி திருப்தியென்னும் உண‌ர்வைச் சுவைத்த‌து...!!
இரண்டொரு நாட்களில் கார் கைக்குக் கிடைத்திடம் வாய்ப்பும் அதிர்ஷ்டத்தை ஊர்ஜிதம் செய்திட....

த‌ட‌த‌ட‌வெனத் திட்ட‌ங்க‌ள் தீட்டினான் ச‌ந்தோஷ‌த்தைக் கொண்டாடித் தீர்க்க‌!! பாட்டியிட‌ம் சென்று, கார் வருப்போகும் தினம் மாலையில் குடும்ப‌த்தோடு தாத்தா க‌ட்டிய‌ குல‌தெய்வ‌க் கோவிலுக்கு புதுக்காரில் முத‌ல்ப‌ய‌ண‌ம் என‌க் கூறினான்.... ஆயிர‌ம் யோச‌னைக‌ள் தோன்றியிருந்தாலும் பாட்டியை மகிழ்விக்க‌ இதுதான் மிக‌ச்சிற‌ந்த‌தாய்த் தோன்றிய‌து!!! அஞ்ச‌லியிட‌ம் ம‌ட்டுமின்றித் த‌ன் த‌ந்தையிட‌மும் த‌ன் சந்தோஷ‌த்தையெல்லாம் முழுமையாய் சுத‌ந்திர‌மாய்ப் ப‌கிர்ந்துகொள்ளமுடிவது பல வருட மன இறுக்கங்கள் முற்றிலுமாய்த் தளர்ந்ததுபோனது போல் ஓர் உணர்வு.... இன்று(முதல்) அலுவலகம் முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது வீட்டில் பாட்டியிருப்பார்!!!


                                                                            21 

இரண்டு நாட்களும் வேகமெடுத்து ஓடிட இன்றுமாலை புதுக்காரில் முதல்பயணம்!!!

தன்பாட்டியின் நினைவினாலோ என்னவோ அஞ்சலி பாட்டியம்மாவுடனேயேதான் தனது பெரும்பாலானத் பொழுதுகளை செலவிட்டுக் கொண்டிருந்தாள்...

"பாட்டிம்மா... சந்தோஷமா இருக்கீங்களா?"

என்று அடிக்கடி அஞ்சலி கேட்டுக்கொண்டே இருந்ததற்குக் காரணங்கள் இருந்தன...!

ஜீவா இந்த இரண்டு நாட்களும் வீட்டுக்கு அடிக்கடி ஃபோன் செய்துகொண்டேயிருந்தான்.... பாட்டி என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று கேட்கக் கேட்கத் தனியே இத்தனை வருடங்கள் அந்தக் கிராமத்துவீட்டில் இந்த நேரங்களில் என்ன செய்துகொண்டிருந்திருப்பார் தன் செல்லப் பாட்டி என்று கிரஹித்துப் பார்க்க முயற்சித்த‌வனாயிருந்தான்!!!

ஜீவாவால் நிச்சியம் அதை உணர முடியாது என்று பாட்டிம்மாவுக்குத் தெரியும்... பேரனுக்காக சிறைபட்டிருக்கிறார் இம்முறை..... தன் அறையைவிட்டுப் பாட்டி அதிகம் வெளியே வரவேயில்லை... அந்த மாடிவீட்டு அறையிலிருக்கும் ஜன்னல் வழியே அடிக்கடி வெளியே கீழே தரையைப் பார்த்தவண்ணமாகவே இருந்தார்.... தனக்கும் நிலத்துக்கும் இடைப்பட்ட உயரத்தைக் கணக்கிடுவதாக இருந்தது அந்தப் பார்வை... அந்த உயரம் ஏன் பாட்டியைத் துன்புறுத்துகிறது என்று புரியவில்லை....

காலையில் எழுந்ததுமுதலே உடலில் ஏதோவொரு உஷ்ணத்தை உணர்ந்து கொண்டேயிருந்தார் பாட்டியம்மா..... கார் பயணம்... ஜன்னல்வழியே பார்த்த புது பரபரப்புகள்.... கார் ஷோரூம்கள்.... புதுஇடத்துக்குப் பழக்கமில்லாது போதிய தூக்கமின்றி இடைவிழித்த இமைகள்.... அமர்ந்திருக்கும்போது கூட நகர்வதுபோலவே உணர்ந்தார்.... ஏதேதோ படபடப்புகளை உணர்ந்தார்... என்னவென்றே தெரியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டுப்போன பாட்டியம்மா தன் வீட்டில் சோர்வு போக்குவதுபோலச் சுவற்றில் சாய்ந்து தரையில் அமர்ந்துபார்த்தார்.... தாத்தா பார்த்துப் பார்த்துக் கட்டிய அந்த வீட்டுச் சுவர் தந்த ஆறுதல் ஸ்பரிசத்தை இந்த கான்க்ரீட் சுவர்களால் தர இயலவில்லை... அஞ்சலியிடம் சொல்லியிருந்தால் டாக்டரிடம் அழைத்துச் சென்றிருப்பார்கள்....... தன் உடலுக்குள் இதுவரைப் பழக்கப்பட்டிருக்காதப் புதுவகை அழுத்த்தை உணர்ந்த பாட்டியம்மாவுக்கு உடல் வியர்க்கத் துவங்கியது... தனக்கு ஏதோ நேரப்போவதை உண‌ர‌த் துவ‌ங்கிவிட்ட‌
பாட்டியம்மா கொஞ்சம் மங்கிய‌ தனது கண்களால் தன்னுடைய‌ பையைக் துழாவ ஆரம்பித்தார்......!

                                                                        22

ஜீவாவுக்கு வீட்டிலிருந்து அழைப்பு... மறுமுனையில் கோபமாய் ராஜகோபாலன்..... ஆசைஆசையாய் அன்புமகன் போட்ட திட்டங்கள் அனைத்தும் காரணமின்றி தவிடுபொடி ஆன ஆற்றாமை மகன்மீதே கோபமாய் வெடித்தது...... மீண்டும் அதே கதை.... பாட்டி வீட்டில் இல்லை..... கிளம்பிவிட்டார்...!

குழம்பிப்போன ஜீவா.... நிதானமாக அஞ்சலியை அழைத்தான்.... அஞ்சலியின் பேச்சின்மூலம் பாட்டியின் பதற்றமான நிலையை ஓரளவு உணரமுடிந்தது ஜீவாவுக்கு... அஞ்சலியிடமும் அம்மாவிடமும் சொல்லிவிட்டுதான் சென்றிருக்கிறார் தன் பையைத் தூக்கிக்கொண்டு...!

"ஆனால் ஏன்???"  என‌க்கேள்வியெழுப்பும் மனதிற்குச் சொல்ல பதிலில்லை!

எந்தவோர் உண‌ர்வும் இல்லாமல் அப்படியே அமைதியானான் ஜீவா.....

அவ‌ன் செல்ஃபோன் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தது.... ஆசையாக‌ வாங்கிய‌ புது கார் டெலிவ‌ரிக்கு ரெடியாக‌ இருப்ப‌தைச் சொல்ல‌க் கார் ஷோரூமிலிருந்து தொட‌ர்ந்தன‌ அழைப்புக‌ள்..!!!


                                                       (தொட‌ரும்..... அடுத்த பாகத்தில் முடியும்!!)

அடுத்த பாகம் இங்கே!

6 comments:

  1. எப்போ இதையெல்லாம் புத்தகமா ரிலீஸ் பண்ணுவீங்க...

    ReplyDelete
  2. ஓய்..என்ன கொஞ்சம் சீரியஸ் ஆ போகுது...:)) ம்ம்...பாட்டிக்கு ஏதாவது ஆச்சுனால்...சகோ உங்களை சும்மா விட மாட்டேன்...:))))

    இப்படிக்கு,
    பாட்டியை நேசிக்கும் பேத்திகள் சங்கம்.....:))

    ReplyDelete
  3. அதுதான் பதிவுலகத்திலேயே ரிலீஸ் செய்தாச்சே!! :)
    புத்தகம்னு யோசிக்கிறது எல்லாம் ரொம்ப பெரிய விஷயம்... நான் இன்னும் பிகினர் தானே... நிறைய மெருகேறணும் இல்லையா!!

    நன்றி நண்பா :)

    ReplyDelete
  4. //ஓய்..என்ன கொஞ்சம் சீரியஸ் ஆ போகுது...:)) ம்ம்...பாட்டிக்கு ஏதாவது ஆச்சுனால்...சகோ உங்களை சும்மா விட மாட்டேன்...:))))//

    இப்படி மிரட்டினா எப்படி சகோ.....
    எனக்கு இப்பவே பயமா இருக்கு!!!
    :-))

    ReplyDelete
  5. அருமையா கதையை கொண்டு போறீங்க பாஸ். தொடருங்க.

    ReplyDelete
  6. நன்றி அக்பர் :)
    எப்படி இருக்கீங்க நண்பா...
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)