Friday, November 19, 2010

"தமிழனாக" , "இந்தியனாக" சில "மனித" உணர்வுகள் (பாகம் 2)

"தமிழனாக" , "இந்தியனாக" சில "மனித" உணர்வுகள் (பாகம் 1)

"தமிழனாக" , "இந்தியனாக" சில "மனித" உணர்வுகள் (பாகம் 2):-

ஏற்கெனவே இந்தப் பதிவில் குறிப்பிட்டிருப்பதைப் போல என்னுடைய சித்தி எனக்கு இரண்டு வயது இருக்கும்போதே திருமணமாகி நியூஸிலாந்தில் குடியேறிவிட்டார்... சென்ற வருடம் என் தம்பி, தங்கைகளுடன் அவர்கள் இந்தியா வந்திருந்தபோது, ஒருநாள் இரவு எல்லாரும் தூங்குவதற்கு ஆயத்தமாகும் சமயத்தில் திடீரென என் தம்பி ஒரு தலையணையைத் தூக்கிக்கொண்டு என்னிடம் வந்து "எக்ஸ்க்யூஸ் மி அண்ணா.. மே ஐ யூஸ் யுவர் பில்லோ ப்ளீஸ் ?!!" என்று கேட்டு நின்றான்..... அதே தலையணையை நான் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும்போது அவன் உருவி எடுத்துச்சென்று குறும்பு செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துப்பார்த்தேன்....!! மனித‌ இரத்தத்தில் ஜீன்களின் வழி உறவும், உரிமையும் ட்ரான்ஸ்ஃபர் ஆவதைவிட அதிவேகமாய் மொழியும், உணர்வும், கலாச்சாரமும் இயல்பாகக் கலந்துவிடுகிறது... ஹ்ம்ம்ம்ம்....

மேலே என் த‌ம்பியிட‌ம் நானுண‌ர்ந்ததைப் போன்றதொரு தூரப்பாச‌த்தைத்தான் உண‌ர்ந்தேன் தாய்மொழியில் அன்பைப் ப‌கிர்ந்துகொள்ள முடிந்த என் அண்டை நாட்டுத் த‌மிழ‌ர்க‌ளிட‌ம்... ஃப்ரான்ஸில் இருக்கும் புனித‌ லூர்த‌ன்னை திருத்த‌ல‌த்திற்கு நான் செல்ல‌வேண்டும்... லூர்தின் ர‌யில்வே ஸ்டேஷன் வரை எப்படியோ வந்து சேர்ந்துவிட்டேன்... அந்த ஸ்டேஷனில் குளிரில் த‌னியாக நிற்கிறேன் ஃப்ரெஞ்சு பூமியில் ஆங்கில‌ம் ம‌ட்டும் தெரிந்த‌ நான்! நான் அக்கா என்று அழைக்கக்கூடிய‌ வ‌ய‌தில் அங்கே நின்றிருந்த‌ பெண் ஒருவரின் நெற்றியில் இருந்த‌ பொட்டு என்னிட‌ம் த‌மிழ் பேச, நேரே சென்று ஒரு வ‌ண‌க்க‌ம் வைத்து, அவர்களிடம் நேர‌டியாக‌த் த‌மிழிலேயே உதவி கேட்டேன் இங்கிருந்து கோயிலுக்குப்போக‌ உதவுங்கள் என்று! நான் பிறந்து வளர்ந்த மதுரைப் பழக்கத்தில், எடுத்த‌ எடுப்பிலேயே "அக்கா" என்று உரிமையோடு அழைக்க‌ ஆர‌ம்பித்துவிட்டேன்.. அத‌ன்பின் இல‌ங்கைத் த‌மிழில் இனிக்க‌ இனிக்க‌ப் பேசி அவ‌ர்க‌ளின் குடும்ப‌ம் என்னை அவ‌ர்க‌ளில் ஒருவ‌னாக‌ இணைத்துக்கொண்டு செய்த‌ உத‌விக‌ளை, பகிர்ந்துகொண்ட‌ பாச‌த்தை விவ‌ரிக்க‌த் த‌னி ப‌திவு வேண்டும்...

இன்று ஐரோப்பிய‌ நாடுக‌ளில், நாடிழ‌ந்துவிட்ட‌ கார‌ண‌த்தால் த‌ஞ்ச‌ம் புகுந்திருக்கும் எண்ணற்ற தமிழர்கள், இந்தியர்கள் அல்லர்! இந்தியாவில், தமிழ்நாட்டில் "தமிழ் எங்கள் உயிருக்கும்மேல்" என்று கொக்கரிக்கும் தானைத் தலைவர்களின் நிழல்களில் பிறந்து வளர்ந்து விட்டதாலோ என்னவோ "தமிழர்கள்" என்று சொன்னால் இந்தியாவின் தெற்கில் இருக்கும் தமிழகத்தில் வாழ்பவர்கள் என்றுதான் நினைத்திருந்தேன்... ஆனால் "தமிழ‌ன்" என்ப‌வ‌ன் திரைக‌ட‌ல் ஓடித் திர‌விய‌ம் தேடிய‌வன்.....த‌மிழ்த்தாயின் பாத‌ம் நனைக்கும் இந்திய‌ப் பெருங்க‌ட‌லின் அடியில் ஒரு தேச‌த்தைத் தொலைத்த‌வ‌ன் என்றெல்லாம்.... முத‌ன்முறை ம‌லேசிய‌ ம‌ண்ணில் நான்கு த‌லைமுறைத் த‌மிழ‌ர்க‌ளைக் க‌ண்ட‌பின்தான் தேடிப் படித்துத் தெரிந்துகொண்டேன்..."தமிழன் இல்லாத தேசமில்லை... எனினும் தமிழனுக்கென்றொரு தேசமில்லை" என்னும் வரிகளின் உண்மையை சென்றவிடமெல்லாம் புரிந்துகொண்டேன்...

ஃபிரான்சில் எந்த‌வொரு பொதுஇட‌த்திற்கு சென்றாலும் ப‌த்துபேரைப் பார்த்தால் அதில் ஒருவ‌ர் ந‌ம்ம‌ சொந்த‌க்கார‌ர் போல‌த் தெரிகிறார்... அவ‌ரிட‌ம் தைரிய‌மாகச் சென்று தமிழில் பேசலாம்! "ஹிந்தி தெரியாம‌ல் அதெப்ப‌டி நீ இந்தியாவில் வாழ்ந்துவிட‌ முடியும்" என்று ஆழ‌மாக‌ நம்பிய‌ என்னுடன் வந்த என் மும்பை அலுவ‌ல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள்.... ஃபிரான்சில் நான் தமிழில் பேசி எளிதில் ப‌ய‌ணித்துவிடுவ‌தை ஆச்ச‌ர்ய‌ப்ப‌ட்டுப் பார்த்தார்க‌ள்! "ஹிந்தியை நீங்கள் நேஷனல் லாங்வேஜாக சொல்லுவதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை... இங்கு ஃபிரான்சிலும், இத்தாலியிலும் நீங்கள் பார்ப்பதை வைத்து தமிழை நான் இண்டர்நேஷனல் லாங்வேஜ் என்று அழைக்கலாமா!!" என்று கேட்டு வெறுப்பேற்றினேன்!
 
"இட்லி, தோசை, இடியாப்ப‌ம் கிடைக்கும்" என்று ஃப்ரெஞ்சு ம‌ண்ணில் அங்குமிங்கும் மின்னும் த‌மிழைக் க‌ண்க‌ளில் ஒற்றிக்கொள்ளும் உண‌ர்வு ஒருபுறம் வ‌ந்தாலும்... மறுபுறம் இந்த‌த் த‌மிழ் எழுத்துக்க‌ள் இந்த‌ ஃபாரின் சுவ‌ர்களில் பொறிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌த‌ன் மூலகார‌ண‌ம் ஒரு க‌ண்ணீர் வ‌ர‌லாறு என்ப‌தையும் ம‌றுப்ப‌த‌ற்கில்லை.... இல‌ங்கையைச் சேர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ள் ஐரோப்பாவின் ர‌யில்வே ஸ்டேஷ‌ன்க‌ளில் அவ‌ர்க‌ளின் ப‌ள்ளித் தோழ‌ர்க‌ளை, க‌ல்லூரித் தோழ‌ர்க‌ளை ச‌க‌ஜ‌மாக‌ ச‌ந்தித்துக்கொள்கின்ற‌ன‌ர்! ஆனால் அவ்வாறு ச‌ந்தித்துக்கொள்ளும்போதும் இய‌ல்பாக‌வே பேசிக்கொள்கின்ற‌ன‌ர்.... வாழ்வில் ஆழ‌மான‌ சோக‌ம் ப‌ட‌ர்ந்த‌பின் சின்ன‌ச் சின்ன‌ ஆச்ச‌ர்ய‌ங்க‌ள் எந்த‌ ஆர்ப்பரிப்பையும் அவ‌ர்க‌ளுக்குத் த‌ருவ‌தில்லை என்று நினைக்கிறேன்.... ப‌ள்ளித்தோழ‌ர்க‌ள் க‌ட‌ல்க‌ட‌ந்து சந்தித்து உற‌வாடினாலும் அங்கே அந்தப் ப‌ள்ளி ஓர் இன‌வெறிப் போராட்ட‌த்தில் இடிந்த‌ல்ல‌வா கிட‌க்கிற‌து....

எண்ணற்ற தமிழர்கள்....பேசினோம்... ப‌ழ‌கினோம்.... எவ்வ‌ள‌வோ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌கிர்ந்துகொண்டோம்... ஃப்ரெஞ்சுக் காற்றில் தாய்மொழி வாசனையில் திளைத்தோம்.... ஆயிர‌ம்தான் இருப்பினும் அதை நானும் சரி அவர்களும் சரி....ஓர் "ஊமைப் பாச‌மாக‌"த் தானுண‌ர்ந்தோம் கார‌ண‌ம் எங்களின் நாடுகள் வெவ்வேறாயிற்றே!! பேச்சினூடே நானும் ஒருசில‌ விஷ‌ய‌ங்களைத் தொடவேண்டாம் என்று க‌வ‌ன‌மாக‌ இருந்தேன் அவ‌ர்க‌ளிட‌மும் அதே க‌வ‌ன‌த்தை உண‌ர்ந்தேன்...

இன்று ஃப்ரான்சிலும், இத்தாலி, ஜெர்ம‌னிலும் ந‌ன்றாக‌ வாழ்க்கை அமைத்துக்கொண்டாலும் ஒவ்வொருவ‌ரும் ஒவ்வொரு இடத்துக்கும் வ‌ந்து சேர்ந்த‌ க‌தைகளைக் கேட்க‌வே கொடுமையாய் உண‌ர்ந்தேன்... என‌க்கு உத‌விசெய்த‌தாய் மேலே குறிப்பிட்ட அக்கா, உடன் வ‌ந்திருந்த‌ அவர்களின் த‌ந்தையைத் தன் வாழ்வில் ப‌தினைந்து வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்துக் கடந்த மாதம்தான் ச‌ந்தித்திருக்கிறார்....!! அத‌ற்கு ந‌ன்றி சொல்ல‌த்தான் லூர்த‌ன்னைத் திருத்த‌ல‌த்திற்கு வ‌ந்திருக்கிறார்.... ப‌த்து நாள் என் அம்மா அப்பாவைப் பார்க்காவிட்டால் "ஹோம்சிக்" ஆகிவிடும் நான் அதைக்கேட்டு இய‌ல்பாய்க் க‌ண்க‌லங்கினேன்... ப‌த்துப் ப‌தினைந்து வ‌ருட‌ம் க‌ழித்து ச‌ந்திப்ப‌து எல்லாம் ச‌ர்வ‌ சாதாரணமாம்.... ப‌தினைந்து இருப‌து ஆண்டுக‌ள் க‌ழித்து உற‌வின‌ர்க‌ள் உயிருட‌ன் இருப்ப‌தாய் அறிந்த‌ குடும்ப‌ங்க‌ளெல்லாம் இருக்கின்ற‌ன‌வாம்.... இதையெல்லாம் கேட்டுக் க‌ல‌ங்க‌ "த‌மிழ‌ன்" என்கிற‌ உண‌ர்வு வேண்டுமா.. வெறும் "ம‌னித‌" உண‌ர்வு போதாதா..?? இதும‌ட்டும்தான் என்ம‌ன‌தில் எழுந்த‌ கேள்வி....

"அக‌தி" என்னும் இந்த‌ வார்த்தை ப‌கிர‌ங்க‌ப்ப‌டுத்தும் சமூகக் கொடூர‌த்துக்கு, நில‌த்தையும் நில‌மேற்கொண்ட‌ ஆட்சியையும் கைப்ப‌ற்றப் ப‌ல‌ போர்க‌ளையும், அர‌சிய‌ல் ச‌துர‌ங்க‌ங்க‌ளையும் வென்ற‌ ச‌ரித்திர‌ மாவீர‌ர்க‌ள் அத்த‌னை பேருமே த‌லை குனிய‌ வேண்டும் வெறும் வெறிபிடித்த கோழைகளாக....

"அணாதை" என்னும் வார்த்தையை விட‌க் கொடூர‌மான‌து "அக‌தி" என்று உண‌ரும் நிலை... இந்த‌ இனிமையான‌ கௌர‌வ‌மான‌ ம‌னித‌ர்க‌ள் யாவ‌ரும் வாழ்வில் சில‌மணி நேர‌ங்க‌ளாவ‌து "அக‌தி" என்று உண‌ர்ந்திருக்கிறார்க‌ள்... அறிய‌ப்ப‌ட்டிருக்கிறார்கள் என்று உணர்கையில் நாடு, க‌ண்ட‌ம், ஊர், உல‌க‌ம் என்றெல்லாம் பிரிக்க‌ப்ப‌ட்டிருக்கும் உல‌க‌ வ‌ரைப‌ட‌ங்க‌ளைக் கிழித்து எறிய‌வேண்டுமென்று தோன்றிய‌து....

இன்னும் இன்னும் இன்னும் எவ்வ‌ள‌வோ அனுப‌வ‌ங்க‌ள்!

"த‌மிழ‌ர்"க‌ளுட‌ன் ப‌ழ‌கும்போது ஒவ்வொருவ‌ரும் ச‌ராச‌ரியாக‌ ஒரு ப‌த்தாவாது நிமிடத்தில் " நீங்க‌ள் என்ன‌ ஜாதி?" என்று வாய்க்கூசாம‌ல் கேட்பார்க‌ள்... ந‌ல்ல‌வேளை நான் வ‌ள‌ர்ந்த‌வித‌த்தில் ஜாதி உண‌ர்வைப் போன்ற‌ அருவ‌ருப்புக‌ள் எல்லாம் என‌க்கு விதைக்க‌ப்ப‌ட்டுவிட‌வில்லை என்று நினைத்துக்கொண்டேன்... இருக்கின்ற பிரிவினைகள் போதாதென்று இதுவேறயா என்று நினைத்து சிரித்துக்கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய!

ஈழ‌ம் தொடர்பான விஷ‌ய‌ங்க‌ளைப் பேசிய‌போது இருவேறு நாட்டைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளாக‌த்தான் பேச முடிந்தது... முடிந்த‌வ‌ரை ராஜ‌ப‌க்ஷே, ராஜீவ்காந்தி போன்ற சிக்கலான‌ வார்த்தைக‌ளைத் த‌விர்த்துப்பேசிய‌து ந‌ல‌மாக‌ இருந்தது... எப்ப‌டிச் சின்ன‌ வ‌ய‌தில் பாகிஸ்தான் என்று சொன்ன‌வுட‌ன் ஓர் "இந்திய‌" உண‌ர்வு கொப்பளிக்குமாறு நாம் வ‌ள‌ர்ந்திருக்கிறோமோ அதேபோல்தானே அவ‌ர்க‌ளுக்கும் "இல‌ங்கை" உண‌ர்வு இருக்கும்! இல‌ங்கைக்கு இங்கிருந்து நீளும் ராம‌ர்பால‌ங்க‌ள் போல‌ப் பேசும் அசிங்க‌மான‌ நம் கைப்புள்ள‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் இன்னும் அசிங்க‌மான‌வ‌ர்க‌ள் என்று புரிந்துகொள்ள‌முடிந்த‌து நேர‌டியாக‌ப் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளிட‌ம் பேசிய‌போது... சர்வதேச அர‌சியல், இந்திய அரசியல், இலங்கை அரசியல் என்று பெரும் அரசியல் விளையாட்டுக்க‌ள் ஏற்கென‌வே பிரிந்துகிட‌க்கும் இந்த‌வொரு இன‌த்துக்குக் கூடுத‌ல் சாப‌மாக‌ப் பூசிமூடிவிட்ட‌து என்று க‌வ‌லையுட‌ன் உண‌ர‌முடிந்த‌து... இன‌த்தின்பேரால் உரிமை ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ நிலையில் போராட்ட‌ம் இய‌ல்பான‌து ஆனால் அது எப்ப‌டி சுயாட்சிப் போராட்ட‌மாக‌ வெடித்த‌து என்ப‌தைப் ப‌ற்றி நானும் கேட்டுக்கொள்ள‌வில்லை அவ‌ர்க‌ளும் சொல்ல‌வில்லை.... இந்திய‌த் த‌மிழ‌ர்களைப் பொறுத்தவரைக் தமிழகத்தின் கையில் இருக்கும் 40 இந்திய நாடாளும‌ன்ற‌ சீட்டுக‌ள் நிச்சிய‌ம் அவ‌ர்க‌ளைக் காக்கும் இந்தியாவில் நாடாளும‌ன்ற‌த்தில் கூட்ட‌ணி ஆட்சிக‌ள் இருக்கும்வ‌ரை! மெஜாரிட்டி என்று ஒரு த‌னிக்க‌ட்சிக்குக் கிடைத்துவிட்டால்... ஹிந்தி க‌த்துக்க‌மாட்டேன் என்றெல்லாம் அட‌ம்பிடிக்க‌முடியாம‌ல் ஜோதியில் ஐக்கிய‌மாகிவிடும் நிலையில் இந்திய‌த் த‌மிழ‌ன் இல‌ங்கைத் த‌மிழ‌னின் நேற்றைய‌ உண‌ர்வுக‌ளை இன்னும் நெருக்கமாக புரிந்துகொள்ள‌ நேரிட‌லாம்....

ஃப்ரான்சிலிருந்து திரும்பி மும்பை வ‌ந்த‌ இர‌ண்டு நாட்க‌ளில்... மீண்டும் ஹிந்தி Vs த‌மிழ் ஜாலிஃபைட்டுக‌ள் துவ‌ங்க‌... இன்றும் தொட‌ர்கிற‌து... ஏக் காவ் மே ஏக் கிஸான் ர‌குதாத்தா!! ;)

இத்தனை காஸ்ட்லி அனுபவங்களுக்கு முன்னும் பின்னும்.....என் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கையைப் பொறுத்த‌வரை , முழுக்க முழுக்க உண‌ர்வுப் பூர்வ‌மாய் வாழ்ந்து "முட்டாளா"கி விடுவதையும்... அதே நேர‌ம் எல்லாவற்றையும் அறிவுப்பூர்வ‌மாக‌வே அணுகி "மிருக‌மாகி"ப் போய்விடுவதையும் இர‌ண்டையுமே நான் வெறுக்கிறேன்... முடிந்த‌வ‌ரை உண‌ர்வுக‌ளை மதித்து அறிவுப்பூர்வ‌மாக‌ வாழ‌ முயற்சித்துத் தொடரும் வாழ்க்கைப் ப‌ய‌ண‌த்தில், "த‌மிழன்", "இந்தியன்", "______", "_______" என்று எந்த‌ லேபிளையும் ஒட்டி நான் ப்ராண்ட் ப‌ண்ண‌ப்ப‌டுவ‌தை விரும்பாத‌துதான் என் 'உண‌ர்வு' என்றாலும் உல‌க‌ம் என்னை என் லேபிள்களைப் பார்த்துதான் அழைக்கும்,அணுகும் என்னும் மெய்ப்பொருள் காண்ப‌துதான் 'அறிவு'! இன‌ம், மொழி, ம‌த‌ம், ஜாதி இத்த‌னையையும் தாண்டி நம் பெயர் மட்டுமே நம் அடையாளமாக இருக்குமளவு சக்திகொண்டு எழ‌வேண்டுமெனில் அத‌ற்கு ஒரே வ‌ழி "சுய‌த்தை" மேலும் மேலும் ப‌ல‌ப்ப‌டுத்திக்கொள்வ‌துதான்.... இன்றைய‌ உல‌கில் சுய‌ந‌ல‌மே ச‌ரியான‌ அணுகுமுறை அது பொதுந‌ல‌த்தைப் பாதிக்காத‌ வரை....

"த‌மிழ‌னாக‌" "இந்தினாக‌" சில‌ "ம‌னித‌" உண‌ர்வுக‌ளை என் அறிவுக்கெட்டிய‌வ‌ரை... என் பார்வையில் அது அமைந்த‌ கோண‌த்தில் ப‌கிர்ந்திருக்கிறேன்.... க‌ர்நாட‌காவில், ம‌காராஷ்ட்ராவில், ம‌லேஷியாவில், சிங்க‌ப்பூரில், ஃப்ரான்சில் என்று இன்னும் இன்னும் ப‌ல‌ அனுப‌வ‌ங்க‌ள் இருந்தாலும் இப்போதைக்கு முடித்துக்கொள்கிறேன்.... எப்ப‌டியும் மீத‌மிருக்கும் வாழ்வையும் "த‌மிழ‌னாக‌"வும் "இந்திய‌னா"க‌வும்தானே வாழ்ந்தாக‌ வேண்டும்.... ஸோ அனுப‌வ‌ங்க‌ள் தொட‌ர‌த்தான் செய்யும்!

அன்புட‌ன்,
பிர‌பு எம்

14 comments:

  1. நியூஸியில் இருக்கீங்களா?

    மிகவும் மகிழ்ச்சி.

    எந்த ஊரில் இருக்கீங்க?

    நான் கிறைஸ்ட்சர்ச்.

    ReplyDelete
  2. :(..கனமான பதிவு..
    //"அணாதை" என்னும் வார்த்தையை விட‌க் கொடூர‌மான‌து "அக‌தி" என்று உண‌ரும் நிலை...//
    உண்மை..உணர்ந்திருக்கிறேன்..

    ReplyDelete
  3. இலங்கைத்தமிழர்கள் பழக மிக இனிமையானவர்கள்..

    நான் இங்கு கண்டவர்கள் மிக நல்ல பண்புள்ளவர்கள்

    ReplyDelete
  4. //நியூஸியில் இருக்கீங்களா?

    மிகவும் மகிழ்ச்சி//

    நான் மும்பையில் இருக்கிறேன்...
    என்னுடைய சித்திதான் நியூசிலாந்தில் இருக்கிறார்கள் :)
    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்!!

    ReplyDelete
  5. நன்றி ஹரிஸ்...
    மிகமிகக் கொடுமையான வார்த்தை அது..

    ReplyDelete
  6. //இலங்கைத்தமிழர்கள் பழக மிக இனிமையானவர்கள்..

    நான் இங்கு கண்டவர்கள் மிக நல்ல பண்புள்ளவர்கள் //

    நன்றி நண்பா...

    ReplyDelete
  7. //உண‌ர்வுப் பூர்வ‌மாய் வாழ்ந்து "முட்டாளா"கி விடுவதையும்... அதே நேர‌ம் எல்லாவற்றையும் அறிவுப்பூர்வ‌மாக‌வே அணுகி "மிருக‌மாகி"ப் போய்விடுவதையும் இர‌ண்டையுமே நான் வெறுக்கிறேன்/


    அருமை.. எனது கருத்தை அப்படியே எழுதி விட்டீர்கள்..
    நல்ல பகிர்வு

    ReplyDelete
  8. நன்றி பிரசன்னா...

    ReplyDelete
  9. தனக்கென்று ஒரு தேசம் இல்லாததால் எங்குமே அகதித் தமிழனாக ஈழத்தமிழன் !

    ReplyDelete
  10. romba unarvu poorvama irukkunga ..nalla ezhuththu
    karuththu

    ReplyDelete
  11. //தனக்கென்று ஒரு தேசம் இல்லாததால் எங்குமே அகதித் தமிழனாக ஈழத்தமிழன் !//

    உண்மை அக்கா... :-(

    ReplyDelete
  12. //romba unarvu poorvama irukkunga ..nalla ezhuththu
    karuththu //

    ரொம்ப நன்றிங்க...

    ReplyDelete
  13. பிரபு...எவ்வளவு அழகான கட்டுரை..எவளவு matured ஆன பகிர்வுகள்...இடி மாதிரி விழுந்தது சுயத்தை பத்திய ஒவ்வொரு வரிகளும்...ரொம்ப புடிச்சு இருந்தது பிரபு இந்த கட்டுரை....))

    ReplyDelete
  14. //ஆனந்தி.. said...
    பிரபு...எவ்வளவு அழகான கட்டுரை..எவளவு matured ஆன பகிர்வுகள்...இடி மாதிரி விழுந்தது சுயத்தை பத்திய ஒவ்வொரு வரிகளும்...ரொம்ப புடிச்சு இருந்தது பிரபு இந்த கட்டுரை....))
    //

    ரொம்ப நன்றிங்க...

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)